பாஜகவின் தமிழக அரசியல் கணக்கு…! பிடியை விட்டு கொடுக்காத EPS… தமிழக அரசியலில் ‘பரபர’!!
Author: Babu Lakshmanan25 July 2022, 6:00 pm
அதிமுக
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வரும் எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க சுறுசுறுப்பாக செயல்பட்டும் வருகிறார்.
அதேநேரம் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த ஓ பன்னீர்செல்வம் குறித்து அதிமுக தொண்டர்களிடம் எதிர்மறையான கருத்துகளே நிலவுகின்றன. அது மிக நீண்ட நெடிய பட்டியல் ஆகவும் உள்ளது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த ஓராண்டாக திமுக அரசுக்கு எதிராக எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்க விடாமல் ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டு வந்தார் என்பது அவர்களின் முதல் குற்றச்சாட்டு.
அதுமட்டுமின்றி எம்ஜிஆர் எதற்காக அதிமுகவை தொடங்கினாரோ அதை அப்படியே மறந்துவிட்டு திமுகவை நட்பு பாராட்டவும் தொடங்கினார். தனது மகனான ரவீந்திரநாத் எம்பியை முதலமைச்சர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் நேரில் சந்திக்க வைத்து திமுக ஆட்சி பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டுப் பத்திரமும் வாசிக்க வைத்தார் என்பது அவர்களின் இரண்டாவது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஆகும்.
இபிஎஸ்
இதனால் கட்சியில் இரட்டை தலைமை நீடிப்பது, அதிமுகவின் எதிர்காலத்திற்கு எந்த வகையிலும் உதவாது என்ற மனக்குமுறலை அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள், வட்ட, மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதை அவரும் நன்றாக உணர்ந்தே இருந்தார்.
இந்த நிலையில்தான் கடந்த 11-ம் தேதி சென்னையில் நடந்த அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக அதிமுகவின் பொருளாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கமும் செய்யப்பட்டார்.
கட்சி ஒற்றை தலைமையை நோக்கி திரும்பியதை ஓ பன்னீர் செல்வத்தால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. 99 சதவீத அதிமுக தொண்டர்களும்
பொதுக்குழு உறுப்பினர்களும் தனக்கு எதிராக திரும்பி விட்டதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை. அந்த ஆத்திரத்தில்தான், அதிமுகவில் ஏதாவது ஒரு குழப்பத்தை விளைவித்து கட்சியில் முன்பு தனக்கிருந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற முடியுமா? என்ற முயற்சியில் ஓபிஎஸ் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிகிறது.
அராஜகம்
அதுவும் ஜூலை 11 சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கும், அதில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நேரத்தில், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலக கதவுகளை உடைத்துக் கொண்டு, உள்ளே சென்று சூறையாடியதும் கட்சி அலுவலகங்களின் அசல் பத்திரங்களை அள்ளிச் சென்றதையும் தொலைக்காட்சி செய்தி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தபோது ஓபிஎஸ் இந்த அளவிற்கு கீழ்த் தரமாக செல்வாரா? அவர் எப்படி இத்தனை வருடம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார்? என்ற கேள்விகளும் அதிமுகவின் உண்மையான அனைத்து தொண்டர்களிடமும் எழுந்தது.
“அன்று ஒரு கொள்ளைக் கூட்டத்தின் தலைவன்போல ஓபிஎஸ் நடந்து கொண்டதை அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியை தவிர தமிழகத்தின் வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும் கண்டிக்கவில்லை. இதை மறைமுகமாக ரசித்து மௌனமாக இருந்து விட்டார்கள்” என்று அதிமுக தொண்டர்கள் மனம் குமுறுகின்றனர்.
கட்சியில் ஓபிஎஸ்-க்கு எந்த ஆதரவும் இல்லாத நிலையில், அரசியலில் செல்லாக்காசு ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவர் தற்போது சட்டப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார். ஆனால் அது அவருக்கு கை கொடுக்குமா? என்பது சந்தேகம்தான் என்று அரசியல் சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.
டெல்லியில் இபிஎஸ்
இந்த நிலையில்தான் குடியரசு தலைவர் பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்துக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜனதா மேலிடம் அழைத்தது. அந்த ஏற்றுக் கொண்டு அவரும் டெல்லி புறப்பட்டு சென்று விழாவிலும் பங்கேற்றார்.
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் தங்கியிருக்கவும். புதிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவும், டெல்லியில் தங்கியிருக்கும் நேரத்தில் மோடி, அமித்ஷாவை சந்தித்து பேசவும் அவர் திட்டமிட்டு இருந்தாக கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் இருவரையும் சந்திக்காமல் எடப்பாடி பழனிசாமி முன் கூட்டியே சென்னை திரும்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் சந்திக்காமல், எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பியது அதிமுக தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பாஜகவின் திட்டம்
“பா.ஜனதா தலைவர்களின் மனநிலையை டெல்லியில் தங்கியிருந்தபோது எடப்பாடி பழனிசாமி கேள்விப்பட்டு இருக்கிறார். அவர்களின் ஒரே எண்ணம் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலாவை கொண்ட அதிமுகதான் வலுவானது என்பதுதான். கட்சியின் ஒட்டுமொத்த தொண்டர்களும் இப்போது யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை பற்றியெல்லாம் டெல்லி பாஜக மேலிடத் தலைவர்கள் கொஞ்சமும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
இப்படிப்பட்டதொரு சூழலில் மோடி, அமித்ஷாவை சந்திக்க செல்லும்போது அவர்கள்
நால்வர் அணி யோசனையை தெரிவித்தால் அது கட்சியில் தேவையற்ற குழப்பதை உருவாக்கும். மேலும் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிரானதாகவும் அமையும்.
ஏனென்றால் ஓபிஎஸ், தினகரன், சசிகலா, மூவருமே திமுகவுடன் ரகசிய கூட்டு வைத்திருக்கின்றனர் என்பதை எடப்பாடி பழனிசாமியும் அதிமுக தொண்டர்களும் நன்கு அறிவார்கள். எனவேதான் மோடி, அமித்ஷா இருவரையும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதை தவிர்ப்பதே நல்லது என்று கருதி அவர்களை ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவின்போது மட்டும் சந்தித்து விட்டு, புதிய குடியரசு தலைவர் முர்முவுக்கு வாழ்த்தும் தெரிவித்து பின்பு அவர் சென்னைக்கு திரும்பி விட்டார்.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை முன் வைத்த காலை பின் வாங்குவதில்லை.
பெருவாரியான நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவு தனக்கு உள்ள நிலையில் அதே வேகத்தில் கட்சியை கொண்டு செல்லவே அவர் விரும்புகிறார் என்பதும் வெளிப்படை.
மீண்டும் ஓபிஎஸ் சசிகலா, தினகரன் ஆகியோரை சேர்ப்பது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வேண்டுமானால் பாஜகவுக்கு பலமாக அமையலாம்.
இபிஎஸ் துணிச்சல்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழக பாஜக 28 தொகுதிகளை கேட்டால்கூட அதை ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூவரும் கண்களை மூடிக்கொண்டு கொடுத்து விடுவார்கள். அதேபோல் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு 117 தொகுதிகளை ஒதுக்கவும் தயங்கமாட்டார்கள்.
1980-ல் தமிழகத்தில் எம்ஜிஆரின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு நடத்தப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும், காங்கிரசும் இப்படி சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக்கொண்டு போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்ததால், அதன்பிறகு காங்கிரஸ் தமிழகத்தில் தேய்பிறை நிலைக்கு சென்று விட்டது என்பது அரசியலில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்று.
அப்படியொரு சூழல் அதிமுகவுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூவருக்கும் அக்கறை இருக்கிறதோ, இல்லையோ எடப்பாடி பழனிசாமியிடம் அது மிக அதிகமாகவே உள்ளது.
இதனால்தான் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு 25 எம்பிக்கள் கிடைப்பார்கள், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்று தொடர்ந்து கூறி வருகிறாரோ என்று கருதவும் தோன்றுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிடம், இதுபோல பேரம் பேசி அதிக தொகுதிகளை பாஜகவால் வாங்க முடியாது.
அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக வளர்ந்து வருகிறது என்பது உண்மைதான். அதை மறுக்க முடியாது. அதேநேரம் தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு அக்கட்சி வளர குறைந்த பட்சம் இன்னும் 10 வருடங்களாவது ஆகும்.
ஏனென்றால் வலுவான அடிப்படை கட்டமைப்பை உருவாக்காமல் தமிழகத்தில் பாஜக அசுர வளர்ச்சி காண்பது கடினம்.
அப்படி கட்சி வளர்ச்சி அடையும் வரை பாஜகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூவரும் இருக்கவேண்டும் என்று டெல்லி மேலிட பாஜக கணக்கு போடுவது இயல்பான ஒன்றுதான்.
2017-ல் உள்கட்சி பூசலால் அதிமுக ஆட்சி கவிழ்ந்து இருந்தால் அதனால் திமுகதான் உடனடி பலனை அடைந்து இருக்கும். அதை தடுக்கும் நோக்கில்தான் எடப்பாடி பழனிசாமியையும், ஓபிஎஸ்சையும் அன்று இணைந்து செயல்பட பாஜக மேலிடம் தீவிர முயற்சி மேற்கொண்டது.
அப்போது ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணையாமல் போய் இருந்தால் கூட அதிமுகவின் முழு கட்டுப்பாடும் எடப்பாடி பழனிசாமி வசம்தான் வந்திருக்கும் என்பதும் நிதர்சனமான உண்மை. இப்போது தமிழகத்தின் சில ஆடிட்டர்கள் அதிமுகவை அடியோடு அழிக்க துடிக்கிறார்கள். அவர்கள்தான் அதிமுகவின் பெரும்பான்மையான அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தும் வருகின்றனர். அதை நிச்சயம் எடப்பாடி பழனிசாமி முறியடிப்பார்” என்று நம்பிக்கையோடு மூத்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.