மாபெரும் வரலாற்று பிழை… CAA சட்டத்தை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது ; மத்திய அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
12 March 2024, 8:37 am

மக்களை பிளவுப்படுத்தும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியாகும் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சிஏஏ சட்டம் 2019 (குடியுரிமை திருத்தச் சட்டம்) இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தால் நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களாக உள்ள எந்த சமூகத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றே அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

அதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்த சட்டம் அம்லபடுத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மக்களை பிளவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.

இதன் மூலம் மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது. அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காது. இதற்கெதிராக நாட்டு மக்களுடன் இணைந்து அதிமுகவும் ஜனநாயக ரீதியாக போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்தார்.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?