மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக… பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவது எப்போது..? இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
11 February 2024, 6:39 pm

திண்டிவனம் நகராட்சியில், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகுந்த சிரமப்பட்டு அச்சத்துடன் வாழவேண்டிய சூழ்நிலை நிலவுவது வாடிக்கையான ஒன்றாகும். அதே போல், மக்கள் நலன் கருதி அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் கொண்டுவரப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களை முடக்குவதும், நீர்த்துப்போகச் செய்வதும் தொடர்கதைதான் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும், அ.தி.மு.க. ஆட்சியில், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தை முறையாக செயல்படுத்தாத காரணத்தால், நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளதோடு, சாலைகள் முறையாக மறுசீரமைப்பு செய்யப்படாததன் காரணமாக ஏற்படும் புழுதியால் பொதுமக்கள் மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிக்கு உள்ளாவதாகவும்; சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாகவும்; நகராட்சி முழுவதும் குப்பைகள் சேகரிக்கப்படாமல் அந்தந்த சாலையிலேயே எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தி.மு.க. அரசு பொதுமக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வருவதால், ஒவ்வொரு நாளும் மக்கள் மிகுந்த வேதனையை சந்தித்து வருகின்றனர். நிர்வாகத் திறனற்ற தி.மு.க. ஆட்சியாளர்களின் இத்தகைய மெத்தனப் போக்கு மற்றும் காழ்ப்புணர்ச்சிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், பொதுமக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ள திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத தி.மு.க. அரசைக் கண்டித்தும்; திண்டிவனம் நகராட்சியில், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிடவும்; குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கவும்; குப்பைகளை அகற்றி சுகாதாரம் நிலவிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், 16.2.2024 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், திண்டிவனம் R.S. பிள்ளை வீதி, வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான C.Ve. சண்முகம், தலைமையில் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நலனை முன்வைத்தும், நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Game Changer Shankar songs cost“கேம் சேஞ்சர்”பட பாடலுக்கு இத்தனை செலவா…கோடிகளை மட்டுமே குறிவைக்கும் சங்கர்..!
  • Views: - 291

    0

    0