விடிந்தால் திமுகவினரால் என்ன நடக்குமோ..? என புலம்பும் ஸ்டாலின்.. இவரை நம்பி எப்படி நாட்டை கொடுப்பது..? இபிஎஸ் கேள்வி..!!!

Author: Babu Lakshmanan
27 March 2024, 7:19 pm

திமுக நிர்வாகி ஒருவர் தாக்கியதாக போலீஸ்காரர் ஒருவரே காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் நிலை திமுக ஆட்சியில் உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பசிலியன் நசரேத் மற்றும் விளவங்கோடு அதிமுக வேட்பாளர் ராணியை ஆதரித்து நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் பேசியதாவது ;- கொள்முதல் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 தரப்படும் என திமுக வாக்குறுதி தந்தது. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு தேவையான விலை கிடைக்கவில்லை. திமுக வெளியிட்ட 560 அறிவிப்புகளை நிறைவேற்றியதா..?. திமுக ஆட்சியில் சொத்துவரி 150% உயர்வு, விலைவாசி 40% உயர்வு, அரிசி கிலோவுக்கு ரூ.15 உயர்வு, மின்கட்டணம் 52% உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எப்படி சமாளிப்பாளர்கள்.

திமுக ஆட்சியில் குப்பைக்கும் கூட வரி போட்டு விட்டார்கள். வரி போடாத இனங்களே இல்லை என்ற அளவுக்கு வரிகள் போட்டுள்ளனர். திமுக நிர்வாகி ஒருவர் தாக்கியதாக போலீஸ்காரர் ஒருவரே காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் நிலை திமுக ஆட்சியில் உள்ளது.

விடிந்தால் திமுகவினரால் என்ன நடக்குமோ..? என்று பொதுக்குழுவில் திமுக தலைவர் பேசுகிறார் ; எப்படி இவரை நம்பி நாட்டை கொடுப்பது. திமுக அயலக அணி உள்ளது ; போதைப்பொருள் கடத்துவதற்காகவே உருவாக்கியது போல் தெரிகிறது.
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிடம் இருந்து ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பிடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளி, கல்லூரிக்கு அருகில் கஞ்சா விற்றதாக 2,138 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். கஞ்சா விற்றதாக கண்டறியப்பட்ட 2,138 பேரில் கைது செய்யப்பட்டவர்கள் 148 பேர் தான் ; மற்ற அனைவரும் திமுகவினர் தான். டீசல் விலையை குறைக்க நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கும். இந்த முறையாவது கன்னியாகுமரி தொகுதி மக்கள் அதிமுகவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

கட்சியில் இருக்கும் நிர்வாகிகள், தொண்டர்களை குடும்பமாக பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். திமுகவினரை குடும்பத்தினர் என சொல்லும் போது, அவர்களில் இருந்து ஒருவரை திமுக தலைவராக நியமிக்க முடியுமா..?. அதிமுகவில் உழைக்கின்றவர்களுக்கு மரியாதை உண்டு ; ஆனால், திமுகவில் குடும்ப அரசியல். இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் ஒருவர் கூறுகிறார் எவ்வளவு அடிமை பாருங்கள்.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் தலைமை பதவிகளில் உள்ளார்கள்; ஆனால் திமுகவில் அப்படி கிடையாது.
இந்த முறையாவது கன்னியாகுமரி தொகுதி மக்கள் அதிமுகவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!