1999ல் என்ன நடந்துச்சு… அதிமுகவை குறை சொல்ல திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது : சொல்லி அடித்த இபிஎஸ்!!

Author: Babu Lakshmanan
8 July 2023, 4:31 pm

தூத்துக்குடி : ஊழலைப் பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு எந்த தகுதியும் கிடையாது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது:- கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அவர் கடந்த 6 மாதமாக மன அழுத்தம் பாதிக்கப்பட்டு இருந்தாகவும், 20 நாட்களாக அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறுகின்றனர்.

அவரது வீட்டிலோ, குடும்பத்திலோ, பணி செய்யும் இடத்திலோ எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகின்றனர். பின்னர் அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். அது சிபிஐ விசாரணையாக இருக்க வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது பெங்களூரில் உள்ள நிமோனியா மருத்துவமனையில் காவலர்கள் மன அழுத்தம் பெறாமல் இருப்பதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு 1 1/2லட்சம் காவலர்கள் சிகிச்சை பெற்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தாலே விலைவாசிகள் உயர்த்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு மின் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது. நில வரிகள் உயர்த்தப்பட்டு விட்டது. அமைச்சர் ரகுபதி மீது ஊழல் வழக்கு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் விசாரணைகள் உள்ளது. அவர் அந்த துறைக்கு தமிழக அமைச்சராக இருப்பதற்கே தகுதி இல்லாதவர்.

இவர் கவர்னர் மீது குற்றச்சாட்டுகளை கூறுவது எப்படி சரியாக இருக்கும். அதிமுக ஆட்சியின் போது அரசு மருத்துவமனைக்கு கை இல்லாதவர்கள் சென்றால், கையோடு வருவார்கள். திமுக ஆட்சியில் கையோடு சென்றவர்கள் கை இல்லாமல் திரும்பி வருகின்றனர். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஊழல் வழக்கில் சிக்கிய 15 பேர் தொடர்ந்து வாய்தா வாங்கி வந்தனர்.

தற்போது திமுக ஆட்சியில் அவர்களது கட்சியினரை அரசு வழக்கறிஞர்களாக நியமித்து சரியாக வாதாடாமல் நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர். 1999ல் பிஜேபியுடன் கூட கூட்டணி வைத்த திமுகவினர், தற்போது அதிமுக பற்றி குறை சொல்வதற்கு எந்த அருகதையும் கிடையாது. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பூர்வாங்க பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது. வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநாடு நடத்தப்படுகிறது, எனக் கூறினார்.

தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வந்திருந்தார். கோவில் விருந்தினர் மாளிகை முன்பு வைத்து அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், பேட்டரி கார் மூலம் சண்முக விலாஸ் மண்டபத்திற்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, கோவிலில் உள்ள சூரசம்ஹார மூர்த்திக்கு எதிரிகளை வெல்லக்கூடிய திரிசதி அர்ச்சனை செய்தார். மேலும், மூலவர், சண்முகர் வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜுவ், ராஜலெட்சுமி, எஸ் பி சண்முகநாதன் உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 280

    0

    0