இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக… எங்களை குறை சொல்ல எந்த அருகதையும் இல்லை : CAA விவகாரம்… இபிஎஸ் ஆவேசம்…!!

Author: Babu Lakshmanan
31 January 2024, 6:27 pm

குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

CAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை இன்னும் ஒரு வாரத்தில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியான நிலையில், இதற்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டட பதிவில், இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான #CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான் என்றும், தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறினார்.

மேலும், மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன் என்றும், தமிழ்நாட்டினுள் #CAA கால்வைக்க விடமாட்டோம்! எனக் குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம்.

ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க-வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக. கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.

சிறுபான்மை மக்களை பாதிக்கும் NIA, UAPA சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும். மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுபுறம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுக-வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும், என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 326

    0

    0