ஆ.ராசா விரைவில் சிறை செல்வார்… தேர்தலுக்குப் பிறகு அவர் எங்கே இருப்பாரோ…? நீலகிரியில் இபிஎஸ் பிரச்சாரம்…!!!
Author: Babu Lakshmanan4 April 2024, 4:36 pm
கடந்த மூன்று ஆண்டு காலம் திமுக ஆட்சியில் பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உதகை ஏடிசி பகுதியில் அதிமுக வேட்பாளர் லோகஷ் தமிழ்செல்வனை ஆதரித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்போது பேசிய அவர், பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் லோகேஷ் தமிழ் செல்வனை வெற்றி பெற செய்ய வேண்டும். நீலகிரி மலைவாழ் மக்களுடன் புரட்சி தலைவி ஆடி, பாடி மகிழ்ந்தவர், என்றார்.
மேலும், பல்வேறு திட்டங்களை நீலகிரி மக்களுக்கு கொண்டு வந்து நீலகிரி மக்களை அதிகம் நேசித்தவர் புரட்சித்தலைவி அம்மா, எனக் கூறினார்.
தொடர்ந்து, பேசிய அவர், திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்தால் எந்தவித பிரயோஜனமும் இல்லை. அவருக்கு தலைகனம் ஏறி உள்ளது. மக்களை மதிப்பதில்லை, அவர் அமைச்சராக இருந்தபோது, மக்களுக்கு அவர் என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். மெகா ஊழல் செய்த கட்சி திமுக கட்சி. ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போதைய மத்தியில் ஆண்ட கட்சி காங்கிரஸ் கட்சி. ஆ ராசா மற்றும் கனிமொழி மீது வழக்கு சுமத்தப்பட்டு அவர்களை சிறையில் அடைத்த கட்சி காங்கிரஸ் கட்சி, மீண்டும் அவர் மீது வழக்கு நீதிமன்றத்திற்கு வர இருக்கிறது. ஆகவே, அவர் இங்கே இருப்பாரா..? அல்லது அங்கே இருப்பாரா..? என தெரியவரும். திமுக ஒரு ஊழல் கட்சி, இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு என்றால் திமுக அரசு தான்.
தமிழகத்தில் போதை பொருள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவது திமுக ஆட்சியில் தான். பல்லாயிரம் கோடி போதை பொருளை கடத்தியது திமுக. தேர்தல் பிரச்சாரத்தின் போதோ, தேர்தல் முடிந்த பிறகு அவர் எங்க இருப்பார்கள் என்று வாதம் நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தர சிகிச்சைகளுடன் அரசு மருத்துவக் கல்லூரி நீலகிரி மக்களுக்காக கட்டி தரப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது. அதனை திறந்து வைத்த ஸ்டாலின், நீலகிரி மக்களுக்காக மருத்துவ கல்லூரியை கட்டி தந்தது போல் பேசி வருகிறார்.
சிறந்த சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டத்தை மாற்றி காட்டுவோம். சுற்றுலாவிற்கு வந்து செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி, உள்ளூர் மக்களுக்கு கூடுதல் வருமானம் ஏற்படுத்த அதிமுக ஆட்சி அமைந்த உடன் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்த மூன்று ஆண்டு காலம் திமுக ஆட்சியில் பொம்மை முதலமைச்சராக மு.க ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். மக்களின் நலன்களை பற்றி அவர் கவலைப்படுவதில்லை. விலைவாசி ஏறியுள்ளது அதனையும் கண்டு கொள்ளாத முதலமைச்சர் ஆக இருந்து வருகிறார். நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு மானியம் வழங்கியது அதிமுக அரசு தான், பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டு அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனிற்கு வாக்கு சேகரித்தார்.