உதயநிதிக்கு நாவடக்கம் தேவை… எந்தக் கொம்பனாலும் அதிமுகவை வீழ்த்த முடியா… இனிமேல் தான் ஆட்டமே ; அடித்து ஆடும் இபிஎஸ்…!!

Author: Babu Lakshmanan
26 December 2023, 1:33 pm

எந்தக் கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை- வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று தொடங்கியது. பொதுக்குழு நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை முதலே மண்டபத்தின் முன்பு அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் குவிந்து வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதேவேளையில், அதிமுக பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்ட பிறகு அதிமுக பொதுக்குழு செயற்குழு கூடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கூடியது. இதில், பங்கேற்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார். ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் தள்ளு, முள்ளுவுக்கு பிறகு, அரங்கத்திற்கு அவர் வருகை புரிந்தார்.

அப்போது, அவரை ஆரத்தி எடுத்து கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், மேடையில் இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் என மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- அதிமுக மதுரை மாநாடு போல இனி எந்த கட்சியும் மாநாடு நடத்த முடியாது. அதிமுக மாநாட்டால் மதுரை நகரமே குலுங்கியது. இந்த மாநாட்டில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர். மதுரை மாநாட்டில் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை.

அதிமுக மாநாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்ததால் தான் திமுக இளைஞரணி மாநாடு 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. எந்தக் கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது.

உதயநிதிக்கு நாவடக்கம் தேவை. அரசியல் கத்துக்குட்டியாக இருந்து கொண்டு அதிமுகவை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எதிரிகளோடு துரோகிகள் இணைந்து அதிமுகவை உடைக்க முயற்சி. அதிமுக இனி ஜெட் வேகத்தில் செயல்படும். பெண்கள், இளைஞர்கள் அதிகமுள்ள கட்சி அதிமுக தான். அதிமுக இனி ஜெட் வேகத்தில் செயல்படும்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களால் தமிழகம் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வருவதற்குள் இன்னும் சில அமைச்சர்கள் எங்க இருக்க வேண்டுமோ, அங்கே இருப்பார்கள். சிறையில் இருப்பவரை அமைச்சராக பார்ப்பதா…? கைதியாக பார்ப்பதா..? என்று நீதிமன்றமே கேட்டுள்ளது. அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது, எனக் கூறினார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 297

    0

    0