இலவு காத்த கிளி போல தான் அண்ணாமலை… முதலில் ரஜினிகாந்த் பொதுவெளியில் சொல்லட்டும் ; ஜெயக்குமார்..!!
Author: Babu Lakshmanan17 January 2024, 2:25 pm
அண்ணாமலை தமிழகத்திற்கு முதலமைச்சராவது என்பது இலவு காத்த கிளி போல தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, அதிமுக கொடியை ஏற்றி வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அதிமுக அலுவலகம் இருக்கும் பகுதி முழுவதும் கட்சி தொண்டர்கள் கூட்டம் நிறைந்து இருந்தது. கட்சி அலுவலகத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு பின்னர் தொண்டர்களுக்கு உணவு வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (Greatest of All Time) என்பது போல, இன்றும் என்றும் மக்கள் மனதில் இருப்பவர். 1967 இல் வெற்றி பெற்ற அண்ணாவை வாழ்த்த சென்றவர்களிடம், இதற்கு பரங்கிமலை தொகுதிக்கு சொந்தமானவரான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான் காரணம் என்று தெரிவித்தார்.
அண்ணாவின் கொள்கை லட்சியங்களை பின்பற்றி அண்ணாவிற்கு அடுத்தபடியாக திரைப்படங்களில் கழகக் கொடியை எல்லாம் காட்டி, பட்டி தொட்டி எல்லாம் பரப்பி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றியடைய செயல்பட்டவர். 1972 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்ஜிஆர் பிரிந்து பல அடக்குமுறைகளை கடந்து திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை ஆரம்பித்ததே திமுக என்ற தீய சக்தியில் இருந்து தமிழகத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று தான். ஐ.நா.வால் போற்றப்படக்கூடிய சத்துணவு திட்டம், ஒரு விளக்கு மின்சாரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தார், கோப்புகளில் தமிழில் கையெழுத்து போடுவது போன்ற பல திட்டங்களை கொண்டு வந்தார் எம்ஜிஆர்.
திரைப்பட திரையிலும் அரசியல் துறையிலும் என பன்முகதிறமை கொண்டவர். முடி சூடா மன்னனாக இன்றும் பட்டி தொட்டி எல்லாம் வாழ்ந்து வரும் மாபெரும் இமாலய புகழ்பெற்ற தலைவர்.
எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது இன்றும் பட்டி தொட்டி எல்லாம் அவரின் பாடல்கள் ஒலிக்கின்றன. இன்று எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும் அவை நம் மனதில் நிற்பதில்லை.
சமுதாயத்தை சீரழிக்கும் கருத்துக்கள், பணம் மட்டும் போதும் சமூகம் சீரழிந்தால் பரவாயில்லை என்ற வகையில் நடிகர்கள் நடிக்கும் நிலையில், மக்களுக்கு சிறந்த கருத்துக்களை அளிப்பேன் என்று நூற்றுக்கும் மேற்பட்ட படத்தில் நடித்தார் எம்ஜிஆர்.
ஒரு சில படங்களுக்கு கலைஞர் வசனம் எழுதி இருக்கலாம். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை எம்ஜிஆர் நடித்தார். பல படங்கள் இமாலய வெற்றி பெற்றன. நல்ல கருத்துக்களை நாடோடி மன்னன் போன்ற பல படங்களில் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் நடித்து வெளிவந்த படங்களில் உள்ள தத்துவ பாடல்களை பாடி விளக்கினார்.
இன்றும் தமிழர்கள் மட்டும் இல்லாமல் உலக அளவில் அனைவரும் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னும் கழகம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆயிரத்தில் ஒருவராக எம்ஜிஆர் திகழ்வார், எனக் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி எம்ஜிஆர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “எம்ஜிஆர் உலக அளவில் போற்றப்படும் மாபெரும் தலைவர். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவிப்பார்கள். அதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு விருப்பப்படுபவர்கள் போகலாம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஜாதி மதம் கடந்தது.
இராமர் கோவிலுக்கு நான் செல்லவில்லை. என்னை பொருத்தவரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான், இறைவன் எங்கும் இருக்கிறான். ஜனவரி 22ஆம் தேதியை அரசியல் நிகழ்வாக மாற்றி உள்ளார்களா என்பது குறித்து சிறந்த நீதிபதிகளான மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும், எனக் கூறினார்.
ஜல்லிக்கட்டை சனாதன திருவிழா என்று நிதியமைச்சர் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, தமிழர்களின் வீரத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு, என்று பதிலளித்தார்.
துக்ளக் நிகழ்ச்சியில் அண்ணாமலை முதலமைச்சராக வேண்டும் என்று ரஜினிகாந்த் விரும்பியதாக குருமூர்த்தி தெரிவித்தது குறித்த கேள்விக்கு,”இது ஒரு அறையில் பேசிய விஷயம், ரஜினிகாந்த் சபையில் தெரிவிக்கட்டும் நான் பதில் சொல்கிறேன். அண்ணாமலை தமிழகத்திற்கு முதலமைச்சராவது என்பது இலவு காத்த கிளி போல தான்,” எனக் கூறினார்.