கருணாநிதி மகன் இல்ல… கருணாநிதியே பிறந்து வந்தாலும் ஜெயிக்க முடியாது : அடித்து சொல்லும் கடம்பூர் ராஜு..!!!
Author: Babu Lakshmanan17 October 2023, 10:57 am
கருணாநிதி மகன் இல்லை, கருணாநிதியே இப்ப பிறந்து வந்து நின்றாலும் நடக்கிற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக ஜெயிக்க முடியாது என்று கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவிநத்தம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து 17 பூத்துக்கான முகவர்கள் தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.
பின்னர், முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசியதாவது :- இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமல்ல உலகத்திலேயே ஓர் அரசியல் ஓர் தலைவனும் ஓர் தொண்டனும் தலைவனாக முடியும் என்ற வரலாற்றை படைத்த கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. அதையும் தாண்டி நாங்கள் அடிமைதான், யாருக்கு அடிமை என்று சொன்னால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்கு தான் அடிமை. கருணாநிதி மகன் இல்லை, கருணாநிதியே இப்ப பிறந்து வந்து நின்றாலும் நடக்கிற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக ஜெயிக்க முடியாது, என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி. தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து அதிமுக தான் சட்டமன்ற கூட்டத் தொடரில் எதிர்கட்சியாக அதிமுக எடுத்துரைத்து வருகிறது. சட்டமன்ற கூட்டத் தொடரில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதை அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் பாராட்டியுள்ளனர்.
சட்டமன்றத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசிய நிலையில், அதனை பொறுத்து கொள்ள முடியமால் இருக்கை பிரச்சினை குறித்து பேசுகின்றனர். இருக்கை பிரச்சினை என்பது எங்கள் உரிமை பிரச்சினை. மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது, அவரது இருக்கைக்கு அருகில் துணைத்தலைவர் துரைமுருகனுக்கு இடம் அளித்தேன்.
துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தான் என்று சபாநாயகர் கூறிவிட்டு இருக்கை தர மறுக்கிறார். நாங்கள் தான் அதிமுக என்று நீதிமன்றம், தேர்தல் ஆணையம், மக்கள் மன்றத்தில் நிரூபித்து விட்டோம், சட்டமன்றத்தில் நாங்கள் உரிமையை நிலை நாட்ட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். இதை திமுக அரசியல் செய்கிறது. இதை மறைப்பதற்கு உதயநிதி ஸ்டாலின் இப்படிப்பட்ட கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.
உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரியும். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனித்து போட்டியிட தயாரா? திமுக தயார் என்றால் நாங்களும் தயார். ஒரு தலைவனுக்கு தன்னிலை அறிய வேண்டும். அது தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார். யார் எதிர்கட்சி என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். கடந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக எங்கும் வெற்றி பெறவில்லை.
தென்மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச உள்ளார். தமிழகம் முழுவதும் செல்வாக்கு பெற்ற கட்சி அதிமுக, என்றார்.
இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ்,அம்மா பேரவை அம்பிகை பாலன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, கடம்பூர் விஜி,கோபி,முருகன்,பழனி குமார், சாத்தூர் அப்பன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
0
0