இறந்த பச்சிளம் குழந்தையின் உடல் அட்டைப்பெட்டியில்… ICU-வில் தமிழக சுகாதாரத் துறை ; விஜயபாஸ்கர் விமர்சனம்!

Author: Babu Lakshmanan
11 December 2023, 6:40 pm

சென்னையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் சடலத்தை பெட்டியில் வைத்து கொடுத்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 5ம் தேதி வடசென்னை கன்னிகாபுரம்‌ பகுதியைச்‌ சேர்ந்த மசூத்‌ – செளமியா தம்பதியினரின்‌ குழந்தை, மருத்துவமனைக்கு மீன்பாடி வண்டியில்‌ கொண்டு செல்லும்‌ வழியிலேயே இறந்த நிலையில்‌ பிறந்திருக்கிறது. பின்னர், தாயின் உயிரைக் காப்பாற்ற‌ தனியார்‌ மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு, தொப்புள்கொடி அறுக்கப்பட்ட, பின்னர்‌ கீழ்ப்பாக்கம்‌ மருத்துவமனைக்குக்‌ கொண்டு சென்றனர்.

மேலும்‌, கீழ்ப்பாக்கம்‌ அரசு மருத்துவமனையில்‌, குழந்தையின்‌ உடலைக்‌ கொடுக்க, பணம்‌ கேட்டதாகவும்‌ குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு, குழந்தையின்‌ உடலை, துணியில்‌ சுற்றிக்‌ கொடுக்காமல்‌, சாதாரண அட்டைப்பெட்டியில்‌ வைத்துக்‌ கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னையில் இறந்த பச்சிளம் குழந்தையின் உடல் அட்டைப்பெட்டியில்…தமிழக சுகாதாரத் துறையின் கருப்பு நாள், என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- வடசென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மசூத் என்பவரின் மனைவி செளமியாவிற்கு கடந்த 5ம் தேதி பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், வெள்ளத்தின் நடுவே தட்டுத்தடுமாறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பெண் குழந்தை பிறந்து இறந்த கொடுமைக்கு நடுவே, குழந்தையின் உடலை அடக்கம் செய்ய 2500 ரூபாய் கேட்டிருக்கிறார்கள்.

நான்கு நாட்களுக்குப் பிறகு இறந்த குழந்தையின் உடலை சரியான முறையில் மூடப்படாமல் மருத்துவ அட்டைப்பெட்டியில் வைத்து தந்தையிடம் கொடுத்திருக்கிறார்கள். “கண்முன்னே இறந்து கிடக்கும் குழந்தையை முறையாக மூடி கொடுங்கள் என பெற்றோர்களா சொல்ல முடியும்? அது, அரசு மருத்துவமனையின் கடமை அல்லவா?”

எந்த தந்தையும் தன் வாழ்வில் சந்திக்கவே கூடாத கொடுமை இது. அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை இந்த அரசு காப்பாற்ற தவறி விட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக ‘தமிழக சுகாதாரத்துறை ஐ.சி.யூ-வில் இருக்கிறது’ என தொடர்ந்து ஆதாரங்களோடு குற்றஞ்சாட்டி வருகிறோம். இதோ, மற்றுமோர் உதாரணம்!, என தெரிவித்துள்ளார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 490

    0

    0