கட்சி மாறினால் வீடு தேடி வெட்டுவேன்… அதிமுக நிர்வாகி சர்ச்சை பேச்சு… போலீசாரைக் கண்டு மாடியில் இருந்து குதித்தால் கால்முறிந்த சோகம்!!

Author: Babu Lakshmanan
5 February 2022, 11:48 am

விருதுநகர் : அதிமுக நிர்வாகிகளை மிரட்டும் தொனியில் பேசிய அக்கட்சியின் ஒன்றிய செயலாளர், தன்னை கைது செய்ய போலீசார் வருவதைக் கண்டு மாடியில் இருந்து குதித்ததால் கால்முறிவு ஏற்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இன்று பரிசீலனை செய்யப்பட்ட பிறகு 7ம் தேதி மாலை அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பட்டியல் வெளியாகி விடும். எனவே, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, கடந்த மாதம் 28ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கணி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, யாரேனும் கட்சி மாறி போனால் அவனை வீடு தேடி வெட்டுவேன். மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிட்டு வெட்டுவேன், என் வெட்டு முதல் வெட்டாக இருக்கும், உங்கள் பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனையில்தான் இருக்கும்,” என கட்சியினரை மிரட்டும் தொனியில் பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சண்முகக்கணி மீது கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது, கலவரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், சண்முகக்கணி அவரது வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்றுள்ளனர். அப்போது, போலீசார் வருவதைக் கண்டி அவர், மாடியில் இருந்து குதித்து தப்புவதற்கு முயன்றார். இதில், தவறி விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. பின்னர், கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!