சென்னையில் அதிமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை : கஞ்சா போதை கும்பல் வெறிச்செயல்… சிறுவன் உள்பட 5 பேர் கைது…!!
Author: Babu Lakshmanan28 March 2023, 9:07 am
சென்னை : பெரம்பூர் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி கக்கன் ஜி காலனி ராணி மெய்யம்மை தெருவைச் சேர்ந்தவர் வியாசை இளங்கோவன் (49). இவர் பெரம்பூர் அதிமுக செயலாளராக இருந்து வந்தார். வழக்கம் போல கட்சிப் பணியை முடித்துவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, முத்துமாரியம்மன் கோவில் தெரு அருகே அவரை ஒரு கும்பல் சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியது.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செம்பியம் போலீசார், இளங்கோ உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பெரம்பூர் பகுதியை சேர்ந்த சஞ்சய், கணேசன், வெங்கடேசன், அருண்குமார் மற்றும் ஒரு சிறுவன் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சா போதையில் வீட்டின் அருகே சுற்றித்திரிந்த நபர்களை இளங்கோவன் தட்டிக்கேட்டதாகவும், இதனாலேயே கஞ்சா கும்பல் இளங்கோவனை வெட்டிக்கொன்றதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.