தலைநகரத்தில் தலையை காட்டாத தலைவர் : இனியாவது சாட்டையை சுழற்றுவாரா இபிஎஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2024, 7:38 pm

தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலை நகர் சென்னை பக்கமே தலைவைத்து படுக்காததால் பல பிரச்சினைகள் தூக்கத்தில் உள்ளன. சேலத்தில் அவர் கிடையாக கிடப்பதால் கட்சி நிர்வாகி சுறுசுறுப்பற்றுள்ளனர்.

அதிமுக எதிர்க்கட்சி ஆகி, எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராகி முதல் முறையாக சந்தித்த 18வது மக்களவை தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதை தாங்கிக் கொள்ள முடியாத எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிச்சாமியை துளைத்து எடுத்தனர்.

இந்நிலையில் சென்னையில் திடீரென கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக பேசியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இதில் அவர் பேசியதாவது: ”எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி. திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை” என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்பும் கூட அவர் சென்னை பக்கம் எட்டிப் பார்ப்பதே இல்லை. சேலத்திலிருந்து நிர்வாகிகளை மாவட்ட செயலாளர்களை இயக்குகிறார். அனைத்து தலைவர்களும் தலைநகர் சென்னையில் இருக்கும்போது, எடப்பாடி சேலத்தில் இருப்பது எடுபடுமா என்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெரும் வெள்ளம் பாதித்த போதும் கூட சென்னை மக்கள் திமுகவுக்கு வாக்களித்து இருப்பது எடப்பாடியின் திறமையின்மையை காட்டுகிறது. இது மட்டுமல்ல அவர் சென்னை மக்களோடு இன்னும் நெருங்கி பழகவில்லை என்பதையும் அற்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது.

மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் செயல்பாடுகளை அவர் கண்காணிக்க முடியாமல் திணறி வருகிறார். திடீரென சாட்டையை எடுத்து கன்னியாகுமரி எம்எல்ஏவும், மாவட்டச் செயலாளருமான தளவாய் சுந்தரம் மீது சுழற்றி இருக்கிறார்.

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாடு முழுவதும் பேரணி நடத்துவது வழக்கம். கோர்ட் உத்தரவுப்படி அந்த வகையில்,
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ் பேரணி சென்னை, கோயம்புத்தூர் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது.

அதன்படி, கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியை, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். ஏற்கெனவே, அதிமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ, ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடங்கி வைத்திருப்பது அதிமுக கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், அதிமுக கட்சியில் பொறுப்பு வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கன்னியாகுமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும், கட்சியின் சட்ட திட் திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இதனால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ, தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்’ எனத் தெரிவித்துள்ளார். கடந்த 2001 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தமிழக அமைச்சரவையில் அமைச்சராகவும், மாநிலங்களவை எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிச்சாமி திடீரென களமிறங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பலர் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி பலவிதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை சேலத்தில் இருந்தே கண்காணிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருப்பது, கண்ணை மூடிக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்வதை போன்றதாக உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது, கட்சிக்கு எதிராக ஒரு துரும்பை கிள்ளி போட்டால் கூட, கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாய்ந்து நாக்கு தள்ளும். கட்சி ஆலோசனை கூட்டத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். டி .கே. ஜக்கையன் என்பவர் அம்மா என்று சொல்லாமல் ஜெயலலிதா என்று பெயர் கூறியதற்காக, அவர் ரயிலை விட்டு இறங்கும் போதே மாவட்ட செயலாளர் மட்டும் கட்சி பதவியை பதித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்த கட்சியில் பலரும் பல விதமான செயல்களில் கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருப்பதை கண்காணிக்க முடியாமல் எடப்பாடி திணறி வருவது திமுகவுக்கு மேலும் பலத்தை கூட்டி உள்ளது. இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: கட்சியில் உளவுத்துறையை வைத்து கட்சி நிர்வாகிகளை கண்காணித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள், கோஷ்டி பூசல் சேர்ப்பவர்கள் அனைவரும் வேரறுக்கப்பட்டனர்.

ஆனா எடப்பாடி சேலத்திலிருந்து கொண்டே நிர்வாகிகளை கண்காணிக்க முடியாமல் திணறி வருகிறார். அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் திமுகவுடன் கூட்டணி அமைத்து பல செயல்களில் ஈடுபடுகின்றனர். பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறினாலும், அதிமுகவினர் தற்போதும் பல இடங்களில் மனரீதியான கூட்டணியில் செயல்படுகின்றனர். இவற்றையெல்லாம் கண்காணிக்க அவர் சென்னை வர வேண்டும். அதை விட்டு சேலத்திலேயே முகாமிட்டு இருந்தால் சோகத்தில் தான் மூழ்க வேண்டியது வரும். அதிமுகவுடன் கூட்டணி சேர விரும்பும் கட்சிகளும் சென்னையில் அவர் முகாமிடாததால் அவரைப் புறக்கணிக்க நேரிடும்.

ராமன் இருக்கும் இடம் அயோத்தி என்பது போல, எடப்பாடி இருக்கும் சேலமே அதிமுக தலைமையகம் என நினைத்து அவர் செயல்படுவது. படுத்துக்கொண்டு மேல்நோக்கி உமிழ் நீரை துப்புவதற்கு சமமாகும். ஒரு தளவாய் சுந்தரத்தை தான் அவர் பார்த்திருக்கிறார். பல பேர் கட்சியில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இவர் சாட்டையை சுழற்றாத வரை அதிமுகவுக்கு சோதனையாகவும்,
திமுகவுக்கு சாதனையாக மாறும் என்பதில் ஐயமில்லை என்றனர்.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 234

    0

    0