திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு… துணிந்த எடப்பாடி பழனிசாமி… எச்சரிக்கும் ஓபிஎஸ்… திசை திரும்பும் விவகாரம்…!!

Author: Babu Lakshmanan
20 June 2022, 1:51 pm
Quick Share

அதிமுக பொதுக்குழுவை தள்ளி வைக்குமாறு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ள நிலையில், திட்டமிட்டபடி நடக்கும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். இவர்களின் இருவரது தலைமையில் கடந்த சட்டப்பேரவை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போதிய வெற்றிகளை பெறவில்லை.

எனவே, ஒற்றைத் தலைமை தேர்வு செய்தால் மட்டுமே அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லது என்று கட்சியின் நிர்வாகிகள் கூறி வந்தனர். அந்த வகையில், இந்தக் கோரிக்கை கடந்த சில நாட்களாக வலுத்து வருகிறது. 7 நாட்களாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியே தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

OPS - Updatenews360

ஜுன் 23ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போது, எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமைக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அதிமுகவில் மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 62 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ்-க்கு வெறும் 11 மாவட்ட செயலாளர்களே ஆதரவளித்துள்ளனர்.

இதனால், பொதுக்குழுவை கூட்டி ஒற்றைத் தலைமையை தேர்வு செய்து விட வேண்டும் என்று இபிஎஸ் தரப்பினர் முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நிதமன்ற்ததில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ஒற்றைத் தலைமை தேவையில்லை என்று கூறி வரும் ஓபிஎஸ் தரப்பினர், இன்று எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், பொதுக்குழு நடக்கும் ஸ்ரீவாரி மண்டபத்தில் இபிஎஸ் தரப்பினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர் ஓபிஎஸின் கோரிக்கையை நிராகரித்ததுடன், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு இபிஎஸ் – ஒபிஎஸ் இணைந்துதான் அழைப்பு விடுத்ததாகவும், எனவே, திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என்று பதிலளித்துள்ளனர்.

இதனால், கொதிப்படைந்து போன ஓபிஎஸ், தங்களின் கடிதம் குறித்து பதில் கிடைக்காவிட்டால், உயர்நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், பெரும்பாலான ஆதரவு தனக்கு இருப்பதால், ஓபிஎஸின் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், இபிஎஸ் தரப்பினர் பொதுக்குழுவுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

ஜுன் 23ம் தேதி அதிமுகவில் பெரும் பிரளயமே வெடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 534

    0

    0