தர்மம் வென்றது.. அதிமுகவை வலிமையோடு வழிநடத்த இது சாதகம் ; இபிஎஸ்-க்கு அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து..!!

Author: Babu Lakshmanan
20 April 2023, 5:04 pm

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இதனிடையே, கர்நாடகா சட்டப்பேரவையில் தேர்தலில் புலிகேசி நாடர் தொகுதியில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக போட்டியிடுவதாக அறிவித்தது. அதன்படி, அன்பரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு, தீர்மானங்களை இன்றே அங்கீகரித்து முடிவு அறிவிக்க வேண்டும், என கர்நாடகா தேர்தலில் போட்டியிடுவதை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனை ஏற்று இந்திய தேர்தல் ஆணையமும் ஆலோசனை நடத்தியது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வவம் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட நிலையில், தற்போது அங்கீகரிக்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பு முறையிட்டு உள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், அதிமுக சட்டதிட்ட விதிகள் திருத்தங்களும் அங்கீகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், அதிமுகவை முழுமையாக எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிவிட்டார். அதேவேளையில், ஓபிஎஸ் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு விட்டார். இதனை இபிஎஸ் தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு குறித்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், “இனி அதிமுக என்றால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும், அதிமுக பெயரையோ, சின்னத்தையோ வேறு யாராவது பயன்படுத்தினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு தர்மம் வென்றதன் அடிப்படையில் அமைந்துள்ளது. அதிமுகவை வலிமையோடு வழிநடத்த தேர்தல் ஆணைய தீர்ப்பு சாதகமாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வென்று வரலாறு படைக்கும்,” எனக் கூறினார்.

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறுகையில், “தமிழக மக்களுக்கு இன்று தான் தீபாவளி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என தமிழக மக்கள் நினைக்கின்றனர்,” என்றார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…