அதிமுக பொதுக்குழு வழக்கு.. உச்சநீதிமன்றத்தின் மூலம் ஓபிஎஸ்-க்கு நெருக்கடி… இபிஎஸின் மாஸ்டர் மூவ்..!!

Author: Babu Lakshmanan
9 December 2022, 1:42 pm

டெல்லி ; அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்தனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு எழத் தொடங்கிய பிறகு, ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு அணிகளாக அதிமுக பிளவுபட்டது. இதையடுத்து, பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுக்குழுவை நடத்தி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றினார். மேலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, இந்தப் பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து என்பவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்படும் வரை அல்லது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இரு தரப்பினரும் பதில் மனு தாக்கம் செய்த நிலையில், கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைரமுத்து தரப்பில் கால அவகாசம் கேட்டு வழக்கை ஒத்திவைக்க கோரப்பட்டது.

அதேவேளையில் கட்சி செயல்பாடுகளில் தொய்வு இல்லாமல் இருக்க இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், இடைக்கால நிவாரணம் குறித்து ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதன்படி, இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடைக்கால மனு தாக்கல் செய்தார். அதாவது, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அந்த சமயத்தில் கட்சி பணிகளில் இடையூறு விளைவிக்க கூடாது. இடைப்பட்ட காலத்தில் தேர்தல் வந்தால், அச்சமயத்தில் அ.தி.மு.க கட்சி மற்றும் சின்னம், உள்ளிடவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பன்னீர் செல்வத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும், பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், அதனை காரணம் காட்டி, ஏற்கனவே கட்சி விதிகளில் கொண்டு வந்த மாற்றத்தை தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். இது கட்சி பணிகளில் தொய்வு ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும், என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 12ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. ஒருவேளை, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும் அடியாக இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது.

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 443

    0

    0