அதிமுக பொதுக்குழு விவகாரம்… தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு… அவசர அவசரமாக விசாரணை…!!
Author: Babu Lakshmanan18 August 2022, 11:21 am
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்ல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு கடந்த 10 மற்றும் 11ந் தேதிகளில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கபட்ட நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வெளியானது. அ.தி.மு.கவின் ஜூன் 23ந் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஓபிஎஸ் தரப்பினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதனிடையே, நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா..? அல்லது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்வதா..? என்று ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக நடத்திய ஜுலை 11 பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு, இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயண் ஆஜராகி கோரிக்கை விடுத்தார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் செய்யப்பட்டுள்ள மேல்முறையிடு எண்ணிடப்பட்டு வந்தவுடன் திங்கட்கிழமை விசாரிக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வருமாறு ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.