சசிகலாவுக்கு அதிமுக அளித்த ஷாக்… கொந்தளிக்கும் டிடிவி, ஓபிஎஸ்..!

Author: Babu Lakshmanan
11 May 2024, 7:24 pm

2021 தமிழக தேர்தலின்போது அமைதியாக ஒதுங்கியிருந்த சசிகலா, “உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள்”- புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் மக்களால் நான் மக்களுக்காகவே நான்- புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா என்ற தலைப்புடன் இரண்டு வாரங்களுக்கு முன்பு 15 கேள்விகள் அடங்கிய படிவம் ஒன்றை இணைய தளத்தில் வெளியிட்டு, அதை அதிமுகவினர் நிரப்பி தனக்கு அனுப்பவேண்டும் என கேட்டுக் கொண்டும் இருந்தார்.

அந்தப் படிவத்தில் பெயர், வீட்டு முகவரி, கல்வித் தகுதி, போன் நம்பர், இ மெயில் முகவரி ஆதார் எண், அதிமுகவில் இணைந்த ஆண்டு மற்றும் வகித்த பதவிகள், தற்போது உள்ள பொறுப்பு மற்றும் வேறு கட்சியிலோ அல்லது அமைப்பிலோ இருந்தால் அதன் பொறுப்பு மற்றும் பதவி ஆகியவற்றை குறிப்பிட்டு போயஸ் கார்டனுக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதிமுக, அமமுக, ஓபிஎஸ். அணிகளுக்குள் தனக்கு இருக்கும் ஆதரவு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளவும், தனது ஆதரவு நிர்வாகிகள் யார் யார் என்பதை அடையாளம் காணவும் இந்த தூண்டிலை சசிகலா வீசியதாக கூறப்படுகிறது.

இந்த படிவங்கள் மொத்தமும் வந்து சேர்ந்த பின்னர் அதை தொகுத்து அதன் அடிப்படையில் விரைவில் அவர்களை சந்திக்கவும் சசிகலா திட்டமிட்டு இருந்தார். ஆனால் அது நடப்பதற்கான வாய்ப்பே தென்படவில்லை. ஏனென்றால் தமிழக முழுவதிலும் இருந்தும் இதுவரை 110 பேர் மட்டுமே அவர் வெளியிட்ட படிவங்களை பூர்த்தி செய்து அனுப்பி இருப்பதாகவும், இதனால் அவர் மிகுந்த அப்செட்டுக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும் சசிகலா இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது, இது முதல் முறை அல்ல, ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிமுக நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதுவதையும், அவர்களுடன் போனில் பேசுவதையும் அதை அவர் ஆடியோவாக ஊடகங்களில் வெளியிட்டு சில வாரங்கள் வரை தொடரவும் செய்தார். ஆனால் அது அவருக்கு எந்த விதத்திலும் பலன் அளிக்கவில்லை

அது மட்டும் அல்ல. சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட நான்காண்டுகள் சிறை தண்டனையை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அனுபவித்து முடித்துவிட்டு வெளியே வந்த 2021 பிப்ரவரி மாதம் முதலே சசிகலா அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என்று கூறித்தான் வருகிறார்.

2022 ஜூலை 11ம் தேதி முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவருடைய ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் போன்றோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்பு சசிகலா திரை மறைவில் இருந்தவாறு டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் தனது ஆதரவாளர்களை எப்படியாவது அதிமுகவில் மீண்டும் ஒருங்கிணைத்து விடவேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக சுய விவரங்கள் கோரும் புதிய படிவ அறிவிப்பை அவர் வெளியிட்டவுடன் அது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எந்த சலனமும் இல்லை. சசிகலா எதிர்பார்த்த அளவு படிவங்களை பூர்த்தி செய்து யாரும் அவருக்கு அனுப்பவும் இல்லை. அதிமுக, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என 3 தரப்பிலுமே சசிகலாவின் வேண்டுகோளை கண்டுகொள்ளவே இல்லை. மாறாக டிடிவியும், ஓபிஎஸ்சும் ஒருபடி மேலே போய் சசிகலாவுக்கு இது தேவையில்லாத வேலை என்று தங்களது ஆதரவாளர்களிடம் கடுப்புடன் கூறியதாகவும் தெரிகிறது.

இது சசிகலாவை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தொண்டர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியாமலும், அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க இயலாமலும் அவர் தயங்கியபடியும் மிகுந்த குழப்பத்தில் உள்ளார், என்கிறார்கள்.

அதேநேரம் சசிகலா விண்ணப்ப படிவம் வெளியிட்ட அடுத்த வாரமே
அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக ஒரு அதிரடியில் இறங்கினார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, தான் நீக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் சசிகலா முறையீடு செய்து இருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம் அதை தள்ளுபடி செய்துவிட்டது.

இதற்கு எதிராக சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்கவேண்டும் என அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் அதிரடியாக மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க: விஜய்யா..? ஜோசப் விஜய்யா…? சைலண்டாக நடந்த சம்பவம் ; சர்ச்சையை கிளப்பிய பேப்பர் விளம்பரம்…!!

இதிலிருந்தே சசிகலா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் தனது ஆதரவு இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக சுட்டி காண்பித்து விட்டார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த நிலையில் இபிஎஸ்ஐ ஆதரிப்பதால்தான் சவுக்கு சங்கருக்கு இந்த கஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளது என்று அண்மையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது கிண்டலாக கூறியது அதிமுக தொண்டர்களிடையே கடும் எரிச்சலை கிளப்பி விட்டிருக்கிறது.

அவர்களில் சிலர் உடனடியாக தனிப்பட்ட முறையில் சசிகலாவுக்கு கோபம் கொப்பளிக்க எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், “உங்கள் அக்காள் மகன் வரம்பு மீறி பேசுகிறார். உங்களையும், டிடிவி தினகரனையும் ஜெயலலிதா ஆதரித்ததால்தானே சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிக்கிக்கொண்டார். விரைவிலேயே உயிரையும் இழந்தார் என்று சொன்னால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?…டிடிவி தினகரனின் வாயை கொஞ்சம் அடக்கி வைக்க சொல்லுங்கள். அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் என அத்தனை பேருமே உங்களுக்கும், டிடிவி தினகரனுக்கும் 25 ஆண்டுகள் போயஸ் தோட்டத்தில் அடிமையாக இருந்தது போதாதா?…அது இன்னும் தொடர வேண்டுமா?.. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாகத்தான் உள்ளது. அதிமுகவுக்குள் நீங்கள் மீண்டும் நுழைந்து கட்சியை காலி செய்து விடாதீர்கள். நீங்கள் மூவரும் ஒதுங்கிக்கொண்டாலே 2026-ல் அதிமுக ஆட்சியை கைப்பற்றி விடும்” என்று கடுமையாக சாடியுள்ளனர்.

இது பற்றி மூத்த அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் 99 சதவீதம் எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்து விட்டனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் மூவரும் குட்டையை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே நோக்கம் அதிமுக நான்காக பிளவுபட்டு உள்ளது என்று திமுக கூறுவது போலவே தமிழக மக்களிடம் ஒரு போலியான கட்டமைப்பை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருப்பதுதான்.

இது மறைமுகமாக திமுகவுக்கும், பாஜகவுக்கும் உதவவே செய்யும்.
ஓபிஎஸ்ஐ பொறுத்தவரை ராமநாதபுரம் தொகுதியில் தோல்வி அடைந்து விட்டால், அவர் பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகளே அதிகம். தனிக் கட்சி நடத்தும் டிடிவி தினகரனும் தேனியில் தோல்வி கண்டுவிட்டால் அவர் தனது கட்சியை நடிகர் சரத்குமார் போல பாஜகவுடன் இணைக்கவும் தயங்க மாட்டார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் நான்காம் தேதி இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்” என்கின்றனர்.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ