9.15 மணிக்கு பொதுக்குழு… 9 மணிக்கு தீர்ப்பு… தீர்ப்பு தேதியால் சிக்கலில் அதிமுக பொதுக்குழு..? யாருக்கு சாதகம்…?
Author: Babu Lakshmanan8 July 2022, 6:16 pm
அதிமுக பொதுக்குழு நடைபெறும் 11ம் தேதியன்றே ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், பொதுக்குழு நடக்குமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் முக்கிய கட்சிகளில் ஒன்றான அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜுலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், ஓபிஎஸ் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கிற்கு தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, பொதுக்குழுவுக்கு தடை கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் சரமாரியான வாதங்களை முன்வைத்தனர். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் வாதிட்டனர்.
அதேபோல, கட்சிக்கு எதிராகவும், உச்சபட்ச அதிகாரமிக்க பொதுக்குழுவுக்கு எதிராகவும் ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வாதத்தை முன்வைத்தனர். மேலும், பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவரவும், நிறைவேற்றவும் அதிகாரம் உள்ளதாகவும், அங்கு எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க உரிமை உள்ளதாகவும் குறிப்பிட்ட இபிஎஸ் தரப்பு, எதிர் கருத்து இருந்தால் பொதுக்குழுவில் விவாதிக்கலாம், அதை விடுத்து நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற முடியாது எனக் கூறினர்.
ஜூலை 11 பொதுக்குழு குறித்து ஜூன் 23 பொதுக்குழு கூட்டத்திலேயே அறிவிக்கப்பட்டது என்றும், அதனால் பொதுக்குழு குறித்து கடைசி நேரத்தில் நோட்டீஸ் அனுப்பியதாக கூற முடியாது என்றும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதுடன், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதிலளிக்கச் சொல்லி, வழக்கு விசாரணையை ஒருதினத்திற்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி, இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் தொடங்கியது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்துதான், அதிமுக பொதுக்குழு நடத்தப்படும் என்பதால், இந்த வழக்கின் தீர்ப்பை அதிமுகவினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என உத்தரவிட்டு ஒத்திவைத்தார். அதே நாளில் காலை 9:15 மணிக்கு பொதுக்குழு கூடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அன்றைய தினம் பொதுக்குழு நடைபெறுமா அல்லது அதற்கு தடை விதிக்கப்படுமா என்னும் குழப்ப நிலை நீடித்து வருகிறது.