கட்சிக்கு எதிராக செயல்பட்டவர் ஓபிஎஸ்.. தகுதியை இழந்து விட்டார் ; உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் பதில் மனு..!!
Author: Babu Lakshmanan19 November 2022, 1:33 pm
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஒற்றைத் தலைமை விவகாரத்திற்கு நடுவே, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்தப் பொதுக்கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லாது என்று தீா்ப்பளித்தாா்.
ஆனால், தனி நீதிபதியின் இந்த தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவில், தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அம்மன்.பி.வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் போது பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த அவசரப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதுடன், பதில் மனு தாக்கல் செய்யச் சொல்லி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது ;- தொண்டர்கள் விருப்பம் ,கட்சியின் நலனை கருத்தில் கொண்டு ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழு கூட்டுவதற்க்கு முன்னதாக செல்வத்திற்கு நோட்டிஸ் வழங்கப்ட்டது அதிமுக அலுவலகத்தை சூறையாடி கட்சி விதிகளை ஓ.பன்னீர் செல்வம் மீறியுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் எந்த நிவாரணமும் பெற தகுதியற்றவர் ஓ.பன்னீர் செல்வம், என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.