அதிமுகவின் அடிமட்ட தொண்டன் கூட திமுகவில் சேர மாட்டான் ; சபாநாயகர் அப்பாவுக்கு 48 மணிநேரம் கெடு… ரூ.10 கோடி கேட்டு அதிமுக நோட்டீஸ்..!!!

Author: Babu Lakshmanan
23 November 2023, 9:39 am

அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவுக்கு அதிமுக வழக்கறிஞர் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, ” இபிஎஸ் முதலமைச்சரான பிறகு அதிமுகவில் இருந்து 18 எம்.எல்.ஏக்கள் போர் கொடி தூக்கினர். அந்த சமயத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 40 பேர் திமுகவிற்கு வர தன்னிடம் விருப்பம் தெரிவித்தனர்,” என்று பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதிமுகவை பற்றியும், அதிமுக எம்எல்ஏக்கள் பற்றியும் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக சபாநாயகர் அப்பாவுக்கு அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான ஆர்.எம்.பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கம். இது பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்டு, அடித்தட்டு மக்களுக்காக பாடுபடக்கூடிய, சமதர்ம சமுதாயம் உருவாக்க வேண்டும், சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று அண்ணாயிசம் என்ற கொள்கையோடு தொடங்கப்பட்டு பயணிக்கிற ஒரு மாபெரும் அரசியல் இயக்கம்.

பல பத்தாண்டுகளாக இந்த இயக்கம் எத்தனையோ அரசியல் எதிரிகளால் அவதூறு பேச்சுக்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் பார்த்து அதை எதிர்கொண்டு அதில் அரசியல் களமாடி தேவையானவற்றுக்கு எதிர்வினை ஆற்றி, தேவையற்றதை புறந்தள்ளி மக்கள் நலன் மட்டுமே பிரதானம் என்று பன்னெடுங்காலமாக அரசியல் பயணம் மேற்கொண்டு இருக்கிற ஒரு ஒப்பற்ற இயக்கம் அஇஅதிமுக. 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்ற பொது தேர்தல் ஆகிய தேர்தல்களில் இந்திய வரலாற்றிலேயே தனியாக தேர்தல் களம் கண்டு மாபெரும் வெற்றியை பெற்ற ஒரே ஒப்பற்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.

இது போன்ற வெற்றியைப் பெற்று இருக்கிற இந்த இயக்கத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல் எதிரிகள் பல்வேறு புழுதிகளையும், அவதூறுகளையும் அள்ளித் தெளித்திருக்கிறார்கள் அதையெல்லாம் புறந்தள்ளி மக்கள் நலன் மட்டுமே பிரதானம் என்று பயணம் செய்கிற மாபெரும் இயக்கம் அதிமுக.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும், இயக்கத்தில் ஏற்பட்ட சில சலசலப்புகளுக்கும் எந்த விதமான பேதமும் கருதாத, அப்பழுக்கற்ற தொண்டர்களை பெற்றிருக்கிற இயக்கம் அஇஅதிமுக. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு இன்றைய பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அதிமுகவின் கொள்கையிலிருந்து சிறிதளவும் மாறாமல், அண்ணாயிசத்தோடு மக்கள் நலன் சார்ந்த பணிகளை நல்ல முறையில் தமிழகத்தில் வழங்கிய அரசு அஇஅதிமுக அரசு. அத்தகைய அரசியல் சூழ்நிலையிலும் ஒரு சிறு தொண்டன் கூட, அடிமட்ட தொண்டன் கூட இந்த இயக்கத்தில் இருந்தும், இந்த இயக்கத்திற்கு எதிராகவும் எந்த விதமான வேறுபட்ட நிலைப்பாட்டையும் எடுக்காமல் இந்த இயக்கத்திற்காக இருக்கிற அப்பழுக்கற்ற தொண்டர்களை பெற்றிருக்கிற ஒப்பற்ற இயக்கம் அதிமுக.

அப்படிப்பட்ட இந்த இயக்கம் 2021 சட்டமன்ற பொது தேர்தலில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது, அந்த மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறது அந்த ஆட்சியின் சட்டப்பேரவை சபாநாயகராக நீங்கள் பதவி வகித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

சட்டப்பேரவை சபாநாயகர் பதவி என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நியாயமான, நடுநிலையான பதவியாக இருக்க வேண்டும் மாறாக, திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் போல உங்களின் செயல்பாடுகள் இருக்கிறது அதிமுகவின் குரல்வளைகளை நசுக்குகின்ற விதமாக உங்களுடைய செயல்பாடு சட்டமன்றத்தில் இருக்கிறது. குறிப்பாக துணை தலைவர் இருக்கை ஒதுக்கும் விஷயத்தில் கூட உங்களுடைய நடுநிலையான நிலைப்பாடு வெளிப்படவில்லை, காரணம் இல்லாத காரணங்களுக்கு கூட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவதில் நீங்கள் மிகுந்த அக்கறை காட்டுகிறீர்கள். இவ்வாறான நிலைப்பாட்டை நீங்கள் எடுக்கிற போதும் சட்டத்திற்கு உட்பட்டும், அவையின் மாண்பை காக்க வேண்டும் என்பதற்காகவும் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை தலைவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தொடர்ந்து வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் ஆளும் கட்சியின் பிரதிநிதியாகவே நீங்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களும், எங்களுடைய கழக தோழர்களும் வருத்தப்படக்கூடிய அளவில் இருக்கிறது. இந்த நிலையில் தற்போதான தங்களின் நிலைப்பாடு எங்களுடைய இயக்கத்தையும், எங்களுடைய இயக்க தொண்டர்களின் மனதை புண்படுத்துகின்ற விதமாகவும் அவதூறு பரப்புகின்ற விதமாகவும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தற்போது ஒரு காணொளி சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பெருவாரியாக பகிரப்பட்டு வருகிறது அது செய்தியாகவும் செய்தித்தாள்களில் வந்திருக்கிறது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களின் மனதையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துகின்ற விதமாகவும் அந்த பேச்சின் காணொளி அமைந்திருக்கிறது.

குறிப்பாக அந்தக் காணொளியில் ஜெயலலிதா அவர்கள் மறைவுக்கு பிறகு இயக்கம் பிளவு பட்ட சூழ்நிலையில் தங்களை கழகத்தின் முக்கியமான நபர் யாரோ ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 40 சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவு தருவதற்கு தயாராக இருப்பதாகவும், அதை மறுத்ததாகவும் உள்ளது. இது ஒரு அப்பட்டமான பொய், சபாநாயகர் என்ற தங்களின் தகுதிக்கு ஒவ்வாத பேச்சு, இந்த பேச்சு சட்டமன்ற உறுப்பினர்களல்ல எங்களுடைய இயக்கத்தின் அடிமட்ட தொண்டன் கூட இது போன இழி செயலை செய்வதற்கு விரும்ப மாட்டான் என்பதை தங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.

இது போன்ற தங்களின் பேச்சானது கழகத்திற்கும், கழகத்தின் உறுப்பினர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற விதமாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் தங்களின் பேச்சு சமூக வலைத்தளங்களில் காட்டுத் தியாக பரவி மாநில செய்தியாக மட்டுமல்லாமல் அது ஒரு தேசிய அளவில் மிகப்பெரிய அலையை ஏற்படுத்தி இருக்கிறது அது கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது.

தங்களின் பேச்சானது எனக்கும் எங்களின் கழக தொண்டர்களுக்கும் மிகுந்த மனவேதனையும், மன உளைச்சலையும் கொடுத்திருக்கிறது, தங்களின் பேச்சு ஒருபுறம் இருந்தாலும் சட்டமன்ற சபாநாயகர் என்ற அந்த வரம்பை மீறி உங்களுடைய பேச்சு அஇஅதிமுகவின் மீது உள்ள வன்மத்தையும் சட்டமன்ற சபாநாயகர் என்ற பொது வெளியில் இருந்து வந்து திமுகவின் பிரதிநிதியாக உங்களின் பேச்சு விளங்குகிறது. கட்சி சார்பற்று இருக்க வேண்டிய நீங்கள், கட்சி சார்பற்று நடக்க வேண்டிய நீங்கள் திமுகவின் செய்தி தொடர்பாளர் போல உங்களின் பேச்சு அமைந்திருப்பது உண்மையில் வேதனையும் வருத்தத்தையும் தருகிறது.

ஒரு சபாநாயகர் என்பவர் கட்சி பேதமற்ற நடுநிலையாளராக விளங்க வேண்டியது தான் மரபு, ஆனால் அதை மறந்து அரசியல் எதிரிகளின் மனதை புண்படுத்துகிற விதமாக ஆளும் தரப்பின் பிரதிநிதியாக அதிகார துஷ்பிரயோகத்தோடு, மனம் சஞ்சலப்படுகிற விதமாக பேசியிருக்கிற உங்களின் பேச்சு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் மான நஷ்ட பழக்கு கொடுப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக நான் கருதுகிறேன் எனவே தங்களின் இந்த பேச்சுக்கு பொது வெளியில் 48 மணி நேரத்திற்குள்ளாக வருத்தம் தெரிவித்து தங்களின் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், இந்த மன உளைச்சலுக்கும் தங்களின் பேச்சுக்கு மான நஷ்ட ஈடாக ரூ 10 கோடி வழங்க வேண்டும் என்றும், தவறினால் உங்கள் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடுப்பதற்கு உண்டான முகாந்திரம் இருப்பதாக கருதி உரிய நீதிமன்றங்களில் அதற்கு உண்டான முன்னெடுப்பு எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 310

    0

    0