அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கைகலப்பு… தள்ளுமுள்ளு… பரபரப்பான சூழலில் ஓபிஎஸ் Present… இபிஎஸ் Absent…!!
Author: Babu Lakshmanan18 June 2022, 12:00 pm
அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் இருபிரிவாக பிரிந்து முழக்கம் எழுப்பிய போது, இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொன்னையன், செம்மலை, ஜெயக்குமார் உள்ளிட்ட 11 பேர் அடங்கிய குழு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து இறுதிகட்ட ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒற்றைத் தலைமை தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுமா..? என்பது இந்தக் கூட்டத்தில் தெரிய வந்துவிடும்.
இதனிடையே, ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் வலுக்கத் தொடங்கியுள்ளதால், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, நிரந்தர ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்று அவரது ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, இபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
இந்த நிலையில், இருதரப்பினரும் மாறி மாறி முழக்கமிட்ட நிலையில், அங்கு சற்று வாக்குவாதம் நிலவியது. மேலும், சிறிது கைகலப்பு ஏற்பட்டதால், அதிமுக அலுவலகத்தில் பதற்றம் நிலவியது.
அதிமுக அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில், அவர் தனது இல்லத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.