தப்பித் தவறி திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது : இபிஎஸ் ..!!

Author: Babu Lakshmanan
1 March 2024, 9:57 am

காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டை காங்கிரசும், பாஜகவும் தொடர்ந்து வஞ்சித்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழகத்துக்குக் காவிரி நீர் பெற்றுத் தராததைக் கண்டித்தும், தஞ்சை திலகர் திடலில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது அவர் பேசியதாவது:- காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக 50 ஆண்டு காலமாக அதிமுக சட்டப் போராட்டத்தை நடத்தி வந்தது. உச்சநீதிமன்றம் வரை ஜெயலலிதா சென்று சட்டப் போராட்டத்தை நடத்தினார். துரதிருஷ்டவசமாக ஜெயலலிதா மறைந்தாலும், அவரது எண்ணப்படி உச்சநீதிமன்றம் மூலம் காவிரி பிரச்னைக்கு அதிமுக அரசு தீர்வு கண்டது.

அத்தீர்ப்பை நிலை நிறுத்துவதற்கு அதிமுகவை சார்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாள்களுக்கு போராட்டம் நடத்தியதால், மத்திய அரசு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் அமைப்பையும் அமைத்தது.

மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றனர். உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை தருவதற்கு கர்நாடக அரசு மறுக்கிறது. இதை திமுக அரசும் தட்டிக் கேட்காததுடன், நமக்குத் தேவையான நீரையும் பெற்றுத் தரவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கர் நெற் பயிர்கள் பால் பிடிக்கும் நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் கருகிவிட்டன.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை குறித்த பொருள் இருந்தும் தமிழ்நாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர். உடனடியாக வெளிநடப்பு செய்யாமல், கலந்து கொண்டதால், அத்தீர்மானம் நிறைவேறியதாகக் கூறி மத்திய நீர்வள ஆணையத்துக்கு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்தது.

அதிமுக பெற்றுத் தந்த தீர்ப்பைக் காப்பாற்ற முடியாத அரசாக திமுக அரசு உள்ளது. இதை மத்திய அரசு என்ன செய்யப் போகிறது எனத் தெரியவில்லை. இதை எதிர்த்துதான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. மேகதாது அணையைக் கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமானால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும்.

நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்த்து வைப்போம். எனவே, அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து, மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் எடப்பாடி பழனிசாமி.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 359

    0

    0