தடையை மீறி கருப்புச்சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டம்… எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை கைது செய்த போலீஸ்..!!
Author: Babu Lakshmanan19 October 2022, 10:15 am
சென்னை : சென்னையில் சட்டப்பேரவையில் ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்ததாகக் கூறி போராட்டம் நடத்திய அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துணை எதிர்கட்சி தலைவராக நியமித்து அதிமுக உத்தரவிட்டது. எனவே, சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கையை ஆர்பி உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடிதம் எழுதப்பட்டது. அதேபோல, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் கடிதம் எழுதப்பட்டது.
இந்த நிலையில், நேற்று சட்டப்பேரவை கூடியதும் சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையை புறக்கணித்தனர். மேலும், ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறி, இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தனர்.
ஆனால், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று காலை போராட்டம் தொடங்கியது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் முழக்கமிட்டனர்.
இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையை கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.