நீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு இல்ல… ஒற்றைத் தலைமைதான் எங்க முடிவு… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்.!!
Author: Babu Lakshmanan23 June 2022, 9:01 am
ஒற்றைத் தலைமை முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. இன்று அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இன்றைய பொதுக்குழுவில் எப்படியாவது ஒற்றைத் தலைமை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக்கி விட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் காத்திருந்தனர்.
ஆனால், இன்றைய அதிகாலையில் பொதுக்ழு குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவிட்டு விட்டது. இதனால், ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து பொதுக்குழுவில் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுக்குழு நடக்கும் வானகரத்திற்கு அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் திரண்டு வந்து கொண்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் அதிகாலையிலேயே பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு வந்து, ஏற்பாடுகளை கவனித்து வந்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமிதான் இருக்க வேண்டும் என்று நேரில் வந்து ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமுமில்லை. நீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம். மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை முடிவு செய்யும், எனக் கூறினார்.