ரேசன் கடை ஊழியர்கள் மீது அடக்குமுறை ஏவுவதா..? தூக்கத்தில் இருந்து விழிப்பாரா முதலமைச்சர் ஸ்டாலின்… ஓபிஎஸ் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
9 June 2022, 12:48 pm

ரேசன்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், நியாய விலைக் கடை ஊழியர்கள், சென்னை குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என அனைவரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாகவும், சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்ற பொருட்கள் மானிய விலையிலும் நியாய விலைக் கடைகள் மூலம் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இதைத் தவிர, மஞ்சள், மிளகு, சீரகம், புளி, எண்ணெய், சோப்பு போன்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் கீழ் செயல்படும் பல்பொருள் அங்காடிகளில், அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை தவிர மஞ்சள், புளி, மிளகு, சீரகம், எண்ணெய் ஆகியவையும் விற்பனை செய்யப்படுவதாகவும், அந்தப் பொருட்கள் தரமற்று இருப்பதால் அதனை குடும்ப அட்டைதாரர்கள் வாங்குவதில்லை என்றும், விற்பனையாகாத இந்தப் பொருட்களை ஊழியர்கள் மீது திணிப்பதாகவும், ஊழியர்களை கேட்காமலேயே அவர்களது சம்பளத்திலிருந்து மாதா மாதம் 1,500 ரூபாய் பிடித்தம் செய்யப்படுவதாகவும், அந்தப் பணத்திற்கு தரமற்ற, விற்பனையாகாத மளிகைப் பொருட்களை வாங்கிச் செல்ல ஊழியர்கள் நிர்பந்தப் படுத்தப்படுவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இது போன்ற செயல்பாடுகள் கடந்த ஆறு மாதங்களாகவே நிலவி வருகிறது. இதனைக் கண்டித்து நான்கூட இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அறிக்கை விடுத்ததோடு, மளிகைப் பொருட்களை ஊழியர்கள் மீது திணிப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், “செவிடன் காதில் ஊதிய சங்கு” என்ற பழமொழிக்கேற்ப, இதனைத் தடுத்து நிறுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், இது இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும் பத்திரிகைச் செய்தியிலிருந்து தெரிய வருகிறது.

இதன்மூலம், தொழிலாளர் விரோதப் போக்கினை இந்த அரசு கடைபிடித்து வருவது தெளிவாகிறது. ஏற்கெனவே நியாய விலைக் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தர வேண்டிய அகவிலைப்படி உயர்வை அளிக்காமல் அவர்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்ற அரசு, அவர்கள்மீது தரமற்ற, விற்பனையாகாத பொருட்களை திணிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்தது போல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் போராட்டத்தில் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை அழைத்துப் பேசி அவர்களுக்குத் தரவேண்டிய அகவிலைப்படி உயர்வு, மளிகைப் பொருட்களை அவர்கள் மீது திணிக்கும் முடிவை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் இல்லை என்று அறிவிப்பது, புதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பது போன்ற தொழிலாளர் விரோதச் செயல்களில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் வெற்றி பெற அதிமுக ஆதரவளிக்கும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருமே கொரோனாத் தொற்று உச்சத்தில் இருக்கும்போது, பொதுமக்கள் எல்லாம் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வராத சூழ்நிலையில், தங்கள் உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்கு சேவையாற்றியவர்கள் என்பதையும், முன்களப் பணியாளர்களாக செயல்பட்டார்கள் என்பதையும், அவர்களுடைய கோரிக்கைகளில் நியாயம் உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல், அவர்களுக்கும் 01.01.2022 முதல் 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை வழங்குவதும், மளிகைப் பொருட்களை வலுக்கட்டாயமாக அவர்கள் மீது திணிப்பதை கைவிடுவதும், இதர கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் தான் ஒரு சிறந்த அரசிற்கு, திறமையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு.

அதைவிடுத்து, அவர்கள் மீது அடக்குமுறையை அரசு ஏவிவிடுமேயானால் அது நிர்வாகத் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். இது ஏற்புடையதல்ல. மாறாக கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தமிழக முதலமைச்சர், இனிமேலாவது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள்மீது மளிகைப் பொருட்கள் திணிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவும், இதர கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 687

    0

    0