சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு…. மேகதாது விவகாரத்தில் திமுக அரசு மவுனம் ஏன்..? இபிஎஸ் சந்தேகம்…!!!

Author: Babu Lakshmanan
22 February 2024, 3:00 pm

இண்டியா கூட்டணியில் காங்கிரசுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் போதே, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அமைதியாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, அவர் பேசியதாவது :- காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணைக்கட்டு தொடர்பாக விவாதிக்க திமுக அரசு அனுமதித்தது ஏன்..?. கர்நாடக அரசு தனது அதிகாரத்தை மீறி மேகதாது அணை குறித்து காவிரி ஆணைய கூட்டத்தில் விவாதித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவது மட்டுமே காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரமாகும். அதிமுக ஆட்சி இருந்தவரை காவிரி ஆணையம் மேகதாது குறித்து ஆணைய கூட்டத்தில் பேசவில்லை. 01.02.24 அன்று தனது 28வது கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட போது, தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்யாதது ஏன்..?.

மேகதாது அணை குறித்து விவாதித்த காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்..?, காவிரி மேலாண்மை ஆணையம் விவாதித்த மேகதாது விவகாரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும், எனக் கூறினார்.

இபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டின் இசைவு இன்றி ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியாது, மேலாண்மை ஆணைய கூட்டம் பற்றி நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவரது பேச்சை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை பேசியதற்கு கண்டன தீர்மானம் பேரவையில் நிறைவேற்றவில்லை. ஒருவேளை மேகதாது அணை கட்டப்பட்டு விட்டால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராமல் வறண்டு போய்விடும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும்.

இன்றைக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள். அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, திமுக அரசு தூங்கிக்கொண்டு இருக்கிறது. விவசாயிகள் மீது அக்கறையின்றி மெத்தனமாகச் செயல்படுகிறது.

இனிமேலும் அரசு தூங்கிக்கொண்டு இருக்காமல், விவசாயிகள் நலன் கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும் விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறுகிறேன். இண்டியா கூட்டணியில் காங்கிரசுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் போதே, தமிழக அரசு அமைதியாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது, எனக் கூறினார்.

  • Lokesh Kanagaraj Kaithi 2 Updates சொர்க்கவாசல் படத்தால் கைதி 2 – க்கு சிக்கல்..குழப்பத்தில் லோகேஷ் ..!
  • Views: - 273

    0

    0