கொலைக் கைதி மீது பொங்கிய பாசம் : அமைச்சர்களால் CM ஸ்டாலினுக்கு தலைவலி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2023, 9:32 pm

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் என்று நினைத்து விஷ சாராயம் குடித்து 22க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டநிலையிலும்,
70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் அந்த குடும்பங்களில் ஏற்பட்டுள்ள துயரம் சொல்லி மாளாது.

அதிகரிக்கும் இளம் விதவைகள்

இவர்களது குடும்பத்தில் 7 பெண்கள் இளம் வயதில் விதவைகள் ஆகியுள்ளனர் என்பது அதைவிட கொடுமை!

மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 20 பேர் கண் பார்வை இழந்தும், கல்லீரல் பாதிக்கப்பட்டும், சிறுநீரகம் செயலிழந்தும் இருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் தமிழக மக்களை இன்னும் பல மடங்கு வேதனை அடையச் செய்கிறது.

இந்தக் கொடிய சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று கொந்தளிப்பும் அவர்களிடம் எழுந்துள்ளது.

ரூ.10 லட்சம் நிதியுதவி

இதற்கிடையே கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாயும், சிகிச்சை பெறுவோருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

அவருடைய இந்த அறிவிப்பும் கூட கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

விதவைகள் சுமங்கலி ஆகிவிடமுடியுமா?

இது குறித்து இளம் வயதில் விதவைகள் ஆன மரக்காணம் எக்கியார்குப்பம் கிராம மீனவர் குடும்ப பெண்களில் சிலர் கூறும்போது, “அரசாங்கம் என்னதான் எங்களுக்கு பணம் கொடுத்தாலும் கூட விதவைகள் ஆகிவிட்ட எங்களுக்கு சுமங்கலி என்ற பெயரை அது பெற்றுத் தந்துவிடுமா?” என்று கதறி அழுது கொண்டே கேட்பது நெஞ்சை நெகிழ வைப்பதாக உள்ளது.

சமூக நல ஆர்வலர்களோ, “நீங்கள் இப்படி நிவாரணம் அறிவித்தது கள்ளச்சாராயம் குடிப்பவர்களை ஊக்குவிப்பது போலவும், இல்லையென்றால் டாஸ்மாக் மதுபானத்தை மட்டுமே அருந்துங்கள் என சிபாரிசு செய்வது போலவும் உள்ளது” என்று தங்களது மனக்குமுறல்களை கொட்டித் தீர்க்கின்றனர்.

திமுகவை கலாய்த்து மீம்ஸ்

“நீ டாஸ்மாக் பக்கம் போகாதே, கள்ளச்சாராயம் குடிச்சு வா! உயிர் போனா பத்து லட்ச ரூபாயாவது கிடைக்கும்” என்று விளிம்பு நிலை குடும்பத்தைச் சேர்ந்த மனைவி ஒருவர், தன் கணவனை கெஞ்சி கூத்தாடுவது போன்ற கேலியான மீம்ஸ்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியில் உள்ள பெருங்கரணை கிராமத்தில் கள்ளச் சாராயம் விற்றதாக அமாவாசை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தானும் கள்ளச்சாராயம் சாப்பிட்டதாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் அரசின் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

குற்றவாளிக்கு நிவாரணம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும்தமிழக காவல் துறை வெளியிட்டகுற்றவாளிகள் பட்டியலில் அமாவாசையின் பெயர் இருப்பதையும், சிகிச்சை பெறுவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் பெறுவோர் பட்டியலிலும் அதே அமாவாசையின் பெயர் இடம்பெற்று இருப்பதையும் சுட்டிக்காட்டி திமுக அரசை பங்கம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட இருந்த 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை நிறுத்தி வைக்கப்பட்டது. என்ற போதிலும் குற்றவாளியின் சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாய் திமுக அரசு வழங்க உத்தரவிட்டதை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், ஐ பெரியசாமி இருவரும் நியாயப்படுத்தி பேசி இருப்பது தமிழக அரசியல் களத்தில் சூறாவளியை கிளப்பிவிட்டுள்ளது.

நியாயப்படுத்திய அமைச்சர்கள்

“கள்ளச்சாராய விஷயத்தில் நிவாரணம் வழங்குவது மனிதாபிமான செயல். கள்ளச்சாராயம் விற்றவரும் அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு நிவாரணம் வழங்கியதில் தவறில்லை” என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட நபருக்கே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமியோ,” அப்படி இல்லைங்க.. ஒரு குடும்பத்துல தவறு செஞ்சவன், அவன் ஏழை, பணக்காரன் அப்படீன்லாம் கணக்கு பார்த்து நிவாரணம் கொடுக்குறது இல்லை. அந்த குடும்பம் நிர்கதியாகிடும்ல.. பணத்தை வைத்து உயிரை மதிப்பிடக்கூடாது. எதுக்குமே ஒரு அளவு கோல் கிடையாது. தமிழகத்தில் கடந்த 2 வருடங்களில் ஒருகள்ளச்சாராய வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தற்போது நடந்திருக்கும் சம்பவம் ஒரு விபத்து”என்று அரசின் அறிவிப்பை நியாயப்படுத்துகிறார்.

சர்ச்சையில் சிக்கிய செஞ்சி மஸ்தான்

அமைச்சர் செஞ்சி மஸ்தானோ, இன்னொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

மரக்காணம் துயரச் சம்பவத்தில், மருவூர் ராஜா என்ற சாராய வியாபாரியின் பெயர் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த இவர், திண்டிவனம் 20வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரம்யா என்பவரின் கணவர். கள்ளச் சாராய விற்பனையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் அவர் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளன.

கள்ளச்சாராய வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபருடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேக் ஊட்டி நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.

சமாளித்த அமைச்சர்

இது பற்றிய கேள்விக்கு அவர், “யார் வேண்டுமானாலும் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். எதார்த்தமாக வருவார்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். நான் பொதுவாழ்வில் இருக்கிறேன். அண்ணே இன்று எனக்கு பிறந்தநாள் என்று ஒருவர் வருவார், அண்ணே ஒருவர் திருமண நாள் எனக்கு என்று வருவார், அவர்களை நாங்கள் வாழ்த்துவோம். புகைப்படம் எடுத்துக் கொள்வோம். அது போன்ற புகைப்படம் தானே தவிர, வேறொன்றும் இல்லை” என்று சமாளித்து இருக்கிறார்.

ஆனால் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும், கள்ளச்சாராய வியாபாரி மருவூர் ராஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறும் திண்டிவனம் நகர சமூக நல ஆர்வலர்கள், ஏற்கனவே பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, “பொய் பேசும்
செஞ்சி மஸ்தான் உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டும்”என்று ஆவேசமாக குரல் எழுப்பியும் உள்ளனர். இதனால் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் பாடு திண்டாட்டத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

கள்ளச்சாராய சந்தேகம்

“அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், ஐ. பெரியசாமி இருவரும் சாராய வியாபாரிகளுக்காக ஏன் மிகவும் அக்கறையுடன் பரிந்து பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் அமாவாசை போலீசார் மற்றும் கட்சியின் உள்ளூர் தலைவர்களுக்கு மாமூல் கொடுத்தது போக
12 முதல் 15 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்திருக்கும் வாய்ப்பு உண்டு.

அவரைப் போன்றவர்களுக்கு அரசின் நிவாரணத் தொகை 50 ஆயிரம் ரூபாய் என்பதெல்லாம் மிகச் சாதாரணம். ஒருவேளை குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக சிறிதளவு கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு அவராகவே மருத்துவமனையில் சேர்ந்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது”என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

“அதுவும் மரக்காணம், சித்தாமூர் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல, அது விஷ சாராயம் என்று மாநில டிஜிபி சைலேந்திரபாபு கூறிய உடனேயே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேர் மீதும் கடந்த 16ம் தேதி கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்படியென்றால் அமைச்சர்கள் இருவரும் கொலைக் குற்றவாளி என்று தெரிந்தும் ஆதரித்து பேசுவது போலத்தான் இருக்கிறது. அதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. ஏனென்றால் ஆயுள் தண்டனை பெற்ற ஒரு கொலைக் குற்றவாளி கூட சிறையில் தொடர்ந்து பல ஆண்டுகள் நன்னடத்தையுடன் இருந்தால்தான் அவர் விடுதலை செய்யும் வாய்ப்பே உருவாகும். அதனால் 22 பேர் பரிதாபமாக உயிரிழக்க காரணமாக இருந்த கைதிகளில் ஒருவருக்கு அமைச்சர்கள் உடனடியாக மனிதாபிமானம் காட்டுவது
சரியான செயல் அல்ல.

மவுனம் காக்கும் கனிமொழி

திமுக அரசு இந்த விஷயத்தில் தவறு செய்துவிட்டதை மறைக்கும் நோக்கத்தில்தான், அவர்கள் இப்படி நியாயப் படுத்தி பேசுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அமைச்சர்கள் இது பேசுவது முதலமைச்சர் ஸ்டாலினுக்குத்தான் தலைவலியைத் தரும். பொதுமக்களும் இதைப்போல ஒரு கேலிக்கூத்து கிடையாது என்றே நினைப்பார்கள். இதனால் திமுக அரசுக்கு அவப்பெயர்தான் ஏற்படும்.

கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக் மது காரணமாக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இளம் விதவைகள் மிக அதிக அளவில் உள்ளனர் என்று ஆவேசமாக பேசி வந்த கனிமொழி எம்பி இப்போது இந்த விஷச்சாராய மரணங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன் என்றுதான் தெரியவில்லை. மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயத்தால் 7 இளம் விதவைகள் உருவாகி இருக்கிறார்கள். அதுவாவது அவருக்கு தெரியுமா?” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கேட்கின்றனர்.

இதுவும் நியாயமான கேள்விதான்!

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!