மீண்டும் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா… ஒருநாள் கூட தாமதிக்கக் கூடாது : ஆளுநரை எச்சரிக்கும் பாமக!!
Author: Babu Lakshmanan8 February 2022, 4:41 pm
தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரும் சட்ட முன்வரைவு தமிழ்நாடு சட்டப்பேரவையில், எந்த திருத்தமுமின்றி, மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க, சரியான முடிவு. ஆனாலும், நீட் விலக்கு என்ற இலக்கை எட்ட இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும் என்பதால் அதற்கு அரசு ஆயத்தமாக வேண்டும்.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என்பதற்கு நியாயமான காரணங்கள் ஒன்று கூட இல்லை. அதனால் தான் நீட் தேர்வு கூடாது என்று கடந்த 12 ஆண்டுகளாகவே பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அரசியல்ரீதியாக மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் கூட, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழகத்தை ஆளும் கட்சிகள் எடுக்கும் அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் பா.ம.க. ஆதரவளித்து வருவதுடன், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டத்தை ஆளுனர் திருப்பி அனுப்பிய நிலையில், அதை மீண்டும் பேரவையில் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என்று பா.ம.க. ஆலோசனை வழங்கியிருந்தது. அதன்படியே, பா.ம.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நீட் விலக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது, இதில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டு நிற்பதை ஆளுனருக்கும், உலகுக்கும் உணர்த்தியுள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கு சட்டரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ எந்தத் தடையும் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பொதுப்பட்டியலில் உள்ள பொருள் தொடர்பாக மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்திலிருந்து, ஒரு மாநிலம் விலக்கு கோரினால், அதை அளிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு. இந்தியா ஒரே நாடு என்றாலும் கூட, அதன் மாநிலங்கள் இனம், மொழி, பண்பாடு உள்ளிட்டவற்றால் மாறுபட்டவை. அதனால், மாநிலத்தின் உணர்வுகளை மதித்து அவற்றின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய மத்திய அரசின் கடமை ஆகும். கடந்த காலங்களில், நுழைவுத்தேர்வு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் மத்திய அரசின் நிலைக்கு எதிரான தமிழ்நாட்டின் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த வரலாறு உண்டு. அதேபோல், இந்த விஷயத்திலும் நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்தியாவில் நீட் தேர்வு எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கமும் தோல்வி அடைந்து விட்டது. நீட் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயரும்; மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படும் என்று மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இன்று நீட் தேர்வில் 400-க்கும் கூடுதலான மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்குக் கூட அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை; மாறாக 150-க்கும் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள், கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்தால் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கிறது. இதன்மூலம் மருத்துவப் படிப்பின் தரத்தை நீட் உயர்த்தவில்லை என்பது உறுதியாகிறது.
நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன் மருத்துவ இடங்கள் எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டனவோ, அதை விட பல மடங்கு கூடுதலான தொகைக்கு, இப்போது மருத்துவ இடங்கள் சட்டப்பூர்வமாகவே விற்பனை செய்யப்படுகின்றன. அதிகாரப்பூர்வ கட்டணமாகவே 5 ஆண்டுகளுக்கு ரூ.1.25 கோடி வரை வசூலிக்கப்படுகிறது. அதனால் மருத்துவக் கல்வி வணிகமயமாவதை நீட் தடுக்கிறது என்ற மாயையும் தகர்ந்திருக்கிறது. அதனால், இந்தியா முழுவதுமே நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும். குறைந்தபட்சம் தமிழ்நாடு நீட் விலக்கு கோரியுள்ள நிலையில் அதற்கு உடனடி ஒப்புதல் தர வேண்டும்.
தமிழ்நாட்டில், ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டியது அரசியலமைப்புச் சட்டக் கடமையாகும். அதை மதித்து நீட் விலக்கு சட்டத்திற்கு, ஒரு நாள் கூட தாமதிக்காமல், உடனடியாக ஆளுனர் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். வரும் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.