கொழுந்துவிட்டு எரியும் அக்னிபாத்.., ரயில்கள் தீ வைப்புக்கு யார் காரணம்…? மத்திய அரசுக்கு எதிரான சதியா..?

Author: Babu Lakshmanan
18 June 2022, 1:07 pm

இளைஞர்கள் நமது ராணுவத்தில் பெருமளவில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிறப்பு திட்டமான அக்னிபாத், ஒரு சில அரசியல் கட்சிகளால் தவறான திசையை நோக்கி திருப்பி விடப்பட்டு உள்ளது.

சில மாநிலங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே ரயிலுக்கும், ரயில் நிலையங்களுக்கும் தீவைப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட அது தூண்டி விட்டும் இருக்கிறது.

அக்னிபாத்

நமது நாட்டில் முப்படைகளில் குறுகிய காலம் சேவையாற்றும் ‛அக்னிபாத்’ என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 4 ஆண்டு பணியாற்றும் திட்டமாக இது அமைந்துள்ளது.

ராணுவத்தில் சேரும் இந்த இளைஞர்கள் ‘அக்னி வீரர்’கள் என்றழைக்கப்படுவார்கள். இதன் அடிப்படையில் 4 ஆண்டுகால ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன் பிறகு 25 சதவீத இளைஞர்கள் முப்படைகளில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் ராணுவத்தில் சேரலாம். தற்போது இந்த வயதுஉச்ச வரம்பு பிரதமர் மோடியால் 23 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

எதிர்ப்பு

எனினும் இத்திட்டத்திற்கு உபி, மத்திய பிரதேசம், பீகார், அரியானா, டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து இருப்பதோடு, இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவும் அளித்துள்ளன.

அக்னி வீரர்களாக தேர்வு செய்யப்படுவோரில் 75 சதவீதம் பேருக்கு பணிபாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பதால், இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரயிலுக்கு தீவைப்பு

பீகாரில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அந்த மாநிலத்தில் பல இடங்களில் ரயில் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டது. ரயில்கள் மீது சரமாரியாக
கற்கள் வீசியும் தாக்கப்பட்டன. ரயில் நிலைய சொத்துகளும் சூறையாடப்பட்டன. உ.பி., அரியானா, ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேச மாநிலங்களிலும் வன்முறை பரவியது. தெலுங்கானாவின் செகந்திராபாத் ரயில் நிலையத்துக்குள் நுழைந்த இளைஞர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடி, தீயிட்டு கொளுத்தி ரயில்வே தண்டவாளங்களில் வீசினர்.

இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது.இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த 7 மாநிலங்களிலும், பொது மக்களின் அன்றாட பயணத்தை தடை செய்யும் விதமாக, ரயில் நிலையங்களைக் குறிவைத்தே பெரும்பாலான தீவைப்பு சம்பவங்கள் நடந்து இருக்கிறது. அதனால் இதை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் கடந்த 3 நாட்களில் மட்டும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே சொத்துக்கள், சூறையாடப்பட்டுள்ளன. தீ வைத்தும் கொளுத்தப்பட்டுள்ளன.
250க்கும் மேற்பட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ரயில்வே இலாகாவுக்கு பயணக் கட்டணமும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக விரோத சக்திகள் மூலம் ஒரு சில அரசியல் கட்சிகள் இளைஞர்களிடையே இப்படி போராட்டத்தை தூண்டு விட்டு இருப்பதாகவும் சில நகரங்களில், பிரிவினைவாதம் பேசும் சில மாணவர்கள் அமைப்பினரும் ரயில்களுக்கு தீ வைக்கும் நாசவேலையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

“போராட்டத்தில் ஈடுபடுவோர் கைகளில் பெட்ரோல் கேன்கள், உருட்டுக் கட்டைகளுடன் ஆவேசமாக நடமாடும் ஊடகங்களின் வீடியோ காட்சிகளை பார்க்கும்போது, திட்டமிட்டே இந்த வன்முறை செயல்களில் இளைஞர்கள் இறங்குகிறார்களோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது. தேசத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்ட எந்தவொரு இளைஞனும் இப்படி வெறிகொண்டு அரசின் பொதுச் சொத்துகளை சேதப்படுத்த நினைக்க மாட்டான்” என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மோடி அரசுக்கு எதிராக..

டெல்லி அரசியல் நோக்கர்களின் கருத்து இதில் மாறுபட்டதாகவும் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது.

“பொதுவாகவே மோடி அரசுக்கு எதிராக, ஒரு திட்டத்தை வகுத்து, ஒரே நேரத்தில் அதை நாடு முழுவதும் பரவச் செய்யும் விதமாக அண்மைக் காலமாக சில எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று.

இம் மாத தொடக்கத்தில், கான்பூர் நகரில் நடந்த வன்முறை, ஒரு திட்டமிட்ட செயல்போல நாடு முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட்டது. எனினும் அதில் எந்த பலனையும் போராட்டங்களை முன்னெடுத்தவர்களால் அடைய முடியாமல் போனதுதான் மிச்சம்.

அதைத்தொடர்ந்து, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் கைமாறிய விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியதற்கு எதிராக அக்கட்சியின் எம்பிக்கள், தலைவர்கள் டெல்லியில் போராட்டத்தில் குதித்தனர். பிறகு மாநிலங்களில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர்.

எதிர்கட்சிகளின் அரசியல் விளையாட்டு

அதே பாணியில்தான் தற்போது நாடு முழுவதும், ரயில்களையும், ரயில் நிலையங்களையும் குறிவைத்து ஒரே நேரத்தில் சொல்லி வைத்தாற்போல போராட்டங்கள் முன்னெக்கப்படுகின்றன. இதில் அரசியல் கட்சிகளில் உள்ள ஒரு சில சமூக விரோத கும்பல்களும் புகுந்து கொள்வதால் ரயில் நிலையங்களுக்கு தீவைப்பு, சூறையாடல் போன்ற வன் செயல்களும் அரங்கேறுகின்றன.

இது திட்டமிட்டு ஒரே நேரத்தில் நடத்தப்படும் சூழ்ச்சியாகவே தெரிகிறது. ஏனென்றால் ரயில் பயணம் தடைபடும்போது, அன்றாடம் பல லட்சக்கணக்கான பயணிகள் பாதிப்படைவார்கள். பயணங்களின்போது ரயிலுக்கு தீ வைக்கப்பட்டால் நூற்றுக்கணக்கானோர் பலியாகும் பெரும் அபாயமும் உள்ளது. எனவே மத்திய பாஜக அரசு இந்த சமூக விரோத செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஏனென்றால் 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை, மக்களை கொதி நிலைக்கு தள்ளுவதுதான் ஒரு சில அரசியல் கட்சிகளின் முதல் வேலையாக இருக்கும்.

அதுவும் மாநில கட்சிகள் தேசிய அளவில் ஒன்று சேர முடியாததால் அந்தந்த மாநிலங்களில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக அவை போராட்டங்களை தீவிரமாக நடத்துகின்றன. இதில் பிரிவினைவாதம் பேசும் மாணவர்கள் அமைப்பினரும் ஈடுபடுவதாக கூறப்படுவதுதான் பெருத்த சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.

அதன் மூலம் மோடி அரசுக்கு உலக அளவில் அவப்பெயரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றவோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

அதன் தொடக்கமாகத்தான் சமீபகால நிகழ்வுகளும் அமைந்துள்ளன. இதன்மூலம் மத்திய பாஜக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு, கோபம், அதிருப்தி ஏற்படவேண்டும் என்பது அந்த அரசியல் கட்சிகளின் கணிப்பாக உள்ளது.

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டது என்று எதிர்க்கட்சிகள் முழங்கும். ஆனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேர வாய்ப்பு கொடுத்தால் அதை கண்களை மூடிக்கொண்டு எதிர்ப்பார்கள். போராட்டங்களையும் தூண்டி விடுவார்கள். இதுதான் எதிர்க்கட்சிகளின் அரசியல் விளையாட்டு” என்றும் அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

சாதகமா…? பாதகமா..?

சரி, அக்னிபாத் திட்டத்தில் அப்படி என்னதான் உள்ளது?…

இத்திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு முதலாம் ஆண்டில் 4 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் சம்பளமும் 4-ம் ஆண்டில் ஆண்டுக்கு 6 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் சம்பளமும் கிடைக்கும். பணி நிறைவடையும்போது ஒவ்வொரு வீரருக்கும் 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சேவை நிதி வழங்கப்படும். முதற்கட்டமாக 50 ஆயிரம் வீரர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு 6 மாத பயிற்சி அளிக்கப்படும்.

இவர்களின் பணித்திறனை பொறுத்து 25 சதவீத வீரர்கள் ராணுவத்தில் நிரந்தரமாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவர்கள் வழக்கமான ராணுவ வீரர்களை போல் 15 ஆண்டுகள் பணியை தொடரலாம். எஞ்சிய 75 சதவீத வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள்.  வீரர்களின் பங்களிப்பு இன்றி 48 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் வசதியும் இவர்களுக்கு கிடைக்கும்.

அதேநேரம் ஓய்வூதியம் உட்பட பாதுகாப்பு துறையில் ஏற்படும் செலவினங்களை குறைக்கவே அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.ஏனெனில் பாதுகாப்பு துறைக்கு 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான 5.25 லட்சம் கோடி ரூபாயில் ஓய்வூதியத்திற்கு மட்டும் 1.19 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அக்னி பாத் திட்டத்தால் குறையும் பெருமளவு செலவை தளவாடங்கள் வாங்க பயன்படுத்துவதே மத்திய அரசின் எண்ணமாக உள்ளது.

பிராந்தியம் மற்றும் சாதி அடிப்படையில் வீரர்களை தேர்ந்தெடுத்து அமைக்கப்படும் படைப்பிரிவுகளில், இத்திட்டத்தால் மாற்றம் ஏற்படும் என்றும், குறுகிய 4 ஆண்டுகால பணிக்கு இளைஞர்களை தேர்வு செய்வது சரியல்ல என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

விளக்கம்

இந்த விமர்சனங்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்து கூறியதாவது:-

இத்திட்டத்தால், பல்வேறு படைப்பிரிவுகளில் மாறுதல் ஏற்படும் என்று கூறுகிறார்கள். அப்படி எந்த மாறுதலும் ஏற்படாது. ஏனென்றால் சிறப்பான அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவதால், அதன் முக்கியத்துவம் அதிகரிக்கவே செய்யும்.
இளைஞர்களிடத்தில் ஒழுக்கம், தேசப்பற்று, ராணுவம் மீதான புரிதலை ஏற்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக அக்னிபாத் திட்டம் இருக்கும். 4 ஆண்டுகள் முடிவில் திறன் மிக்க இளைஞர்கள் நிச்சயம் உருவாகுவார்கள்.
படைப்பிரிவுகளிடையே இணக்கம் அதிகரிக்கும். வரும் ஆண்டுகளில், தற்போதைய ஆள் தேர்வை போல், 3 மடங்கு ஆட்கள் ‘அக்னி பாத்’ திட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள்.

குறுகிய கால பணியால், படைகளின் செயல்திறன் பாதிக்கப்படும் என்றும் சிலர் குறை கூறுகிறார்கள். குறுகிய கால பணி என்பது பல நாடுகளில் இருப்பதுதான். எனவே, இது ராணுவத்துக்கு நன்கு பலன் அளித்த சிறந்த முறை ஆகும். முதல் ஆண்டில் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்கள் எண்ணிக்கை, ராணுவத்தினரின் மொத்த எண்ணிக்கையில் வெறும் 3 சதவீதம் மட்டுமே.

Central Govt Staff - Updatenews360

ஆண்டுகளின் இறுதியில், ஒவ்வொருவரது செயல்திறன் பரிசோதிக்கப்பட்ட பிறகே அவர்கள் நிரந்தர பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். எனவே, ராணுவத்துக்கு நன்கு சோதிக்கப்பட்ட வீரர்கள்தான் கிடைப்பார்கள். மேலும் பெரும்பாலான நாட்டு ராணுவங்கள், இளைஞர்களை சார்ந்தே இருக்கின்றன.

ரஷ்யா, பிரேசில், இஸ்ரேல், ஈரான், துருக்கி, கியூபா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 11 நாடுகள் ராணுவத்தில் இளைஞர்கள் சேருவதை கட்டாயமாக்கியும் உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளாக, ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே இத்திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேறும் ராணுவ வீரர்கள், சமுதாயத்துக்கு ஆபத்தாக உருவெடுப்பார்கள் என்று சிலர் விமர்சிக்கிறார்கள். இது நமது ராணுவத்தை அவமதிக்கும் செயல். 4 ஆண்டுகள் சீருடை அணிந்த இளைஞர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்கு கடமையாற்ற உறுதி பூண்டிருப்பார்கள். ஏற்கனவே ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கூட சமூக விரோதிகளாக மாறியதாக எந்த முன்னுதாரணமும் இல்லை.

ஆண்டு பணியின் முடிவில், ஒவ்வொரு வீரருக்கும் சேவை நிதி தொகுப்பில் இருந்து தலா 11 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அது அவர்களின் நிதி சுதந்திரத்துக்கு உதவும். அதைக்கொண்டு தொழில் முனைவோர் ஆகலாம். இது போன்றவர்களுக்கு வங்கிக்கடனும் அளிக்கப்படும். மேற்கொண்டு படிக்க விரும்புபவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு சமமான சான்றிதழும், உயர் படிப்புக்கான புத்தாக்க பயிற்சிகளும் அளிக்கப்படும்” என்று மத்திய அரசு விரிவான விளக்கம் அளித்துள்ளது.

என்றபோதிலும், இதில் எதிர்க்கட்சிகள் திருப்தி அடைந்த மாதிரி தெரியவில்லை.
ஏனென்றால் வன்முறையும் போராட்டங்களும் நீடிப்பதையே அவை விரும்புகின்றன போலிருக்கிறது!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 686

    0

    0