அதிமுக, பாஜகவுக்கு பாலமாக அமையும் ராமர்.. தூதாக வந்த முதலமைச்சர் : காய் நகர்த்தும் பிரதமர்!!
Author: Udayachandran RadhaKrishnan7 December 2023, 3:56 pm
அதிமுக, பாஜகவுக்கு பாலமாக அமையும் ராமர்.. தூதாக வந்த முதலமைச்சர் : காய் நகர்த்தும் பிரதமர்!!
அதிமுக – பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது.
இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.
அதேபோல் 2024 லோக்சபா தேர்தல் புதிய கூட்டணி அமைப்போம் என்றும் கூறியுள்ளார். அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். அந்த வகையில்தான் புதிய கூட்டணி அமைப்பதற்கான தீவிர ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறாராம். அதன் ஒரு கட்டமாக பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு போன் செய்து பேசி வருகிறாராம்.
இந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம். நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தானில் பாஜக வென்றுள்ளது. அதே சமயம் தெலுங்கானாவிலு, மிசோராமிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
கர்நாடகாவை தொடர்ந்து தென்னிந்தியாவின் மற்றொரு மாநிலமான தெலங்கானாவிலும் காங்கிரஸ் காலூன்றியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தெலுங்கானாவின் 119 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தெலுங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள்.
தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான சிபிஐ 1 இடத்தில் வென்றது. ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி 39 இடங்களில்தான் வென்றது. இதனால் ஆட்சியை காங்கிரஸிடம் பிஆர்எஸ் கட்சி பறிகொடுத்தது.
இங்கே பாஜக வெறும் 6 இடங்களை வென்று படுதோல்வி அடைந்துள்ளது.
தென்னிந்தியாவில் பாஜக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தொடர் தோல்விகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம்.
2024ல் தமிழ்நாட்டில் கூடுதல் எம்பி இடங்களை வெல்லும் விதமாகவும்.. 2026ல் கூடுதல் சட்டசபை இடங்களை வெல்லும் விதமாகவும் பாஜக எடப்பாடி உடன் சமாதானமாகி செல்ல இருக்கிறதாம். இதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூலம் சமாதானம் பேச உள்ளனர்.
அதன்படி உத்தர பிரதேசத்தில் கட்டப்படும் ராமர் கோவில் அடுத்த ஜனவரியில் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எடப்பாடிக்கு அழைப்பு செல்ல உள்ளது. இந்த அழைப்பிதழ் மூலம் எடப்பாடிக்கு சமாதானம் சொல்ல யோகி வழியாக மோடிக்கு தூது விட மோடி திட்டமிட்டு உள்ளாராம். தேர்தலுக்கு ஜனவரியில் இருந்து 4 மாதமே இருக்கும் நிலையில்.. ஜனவரியில் கூட்டணியை இருந்து செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.