எய்ம்ஸ் வருவதை தடுக்க அதிமுக, திமுக முயற்சி.. மதுரையை தாண்டினா ஆர்பி உதயகுமார் யாருனே தெரியாது : அண்ணாமலை!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2024, 11:55 am

மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில், பிரதமர் மோடியை 3-வது முறையாக பிரதமராக வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மற்றும் மத்திய பட்ஜெட் சிறப்பம்சங்களை விளக்கும் வகையில் பொதுக்கூட்டம் நேற்று முனிச்சாலை பகுதியில் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அடுத்த தேர்தல் வருவதற்கு இன்னும் 500 நாட்கள் இருக்கிறது. அரசியல் போர்களத்தில் திராவிட கட்சிகளை அகற்றுவதற்கு பிள்ளையார் சுழி போட வேண்டியதுள்ளது. அந்த பிள்ளையார் சுழியானது, 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்களும் மூலம் போடப்பட்டுள்ளது. அது சாதாரணமான தேர்தல் இல்லை. தமிழகம், திராவிடத்தின் பிடியில் இருந்து வந்து விட்டது என்பதை காட்டும் தேர்தலாக உள்ளது. தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளிலும், பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் வாக்குகள் அதிகரித்துள்ளது. அதாவது அமைக்கப்பட்டிருந்த 68 ஆயிரத்து 45 பூத்களில் 37 சதவீதம் பூத்தில் 1-ம், 2-ம் இடம் வந்துள்ளது. இது சாதனையாகவே நான் பார்க்கிறேன். மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.

2026-ல் இந்த 37 சதவீதம் என்பது 100 சதவீதமாக மாறி, பா.ஜனதா தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். தமிழகத்தை இதுவரை ஆண்ட திராவிட கட்சிகளை அகற்ற வேண்டிய நிலை வந்து விட்டது. சட்டமன்ற தேர்தலில் அது கண்டிப்பாக நடக்கும். திராவிட கட்சிகள் ஒரு முறை ஆட்சிக்கு வந்த பின்னர் ரூ. 15 ஆயிரம் கோடி, ரூ. 20 ஆயிரம் கோடி கொள்ளை அடிக்கும் நிலைதான் உள்ளது. 50, 60 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த கட்சிகள். வங்கக்கடலில் உள்ள தண்ணீரை விட தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளிடம் இருக்கும் பணம் அதிகம். அவை அனைத்து கொள்ளை அடித்து சேர்த்த பணம். அதனை எதிர்த்துதான் நாங்கள் போராட வேண்டிய நிலை உள்ளது. இதுவரை திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப்போட்ட கைகள் சற்று யோசிக்கத்தான் செய்யும். அதற்கான கால அவகாசத்தை நாம் வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டும்.

மதுரை மக்கள் எப்போதும் மாற்றி யோசிப்பார்கள். அவர்களுக்கு அரசியல் நன்கு தெரியும். மதுரையில் பா.ஜனதா 2-ம் இடம் என்பது, இன்னும் 10 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் அரசியல் பக்கத்தில் முதல் பக்கத்தில் முக்கியமானதாக இருக்கும். 2026 தேர்தலில் வரக்கூடிய வெற்றியை, முன்கூட்டியே மதுரை மக்கள் கொடுத்ததாக நினைக்கிறேன். டாஸ்மாக்கடைக்கு சென்று மாமூல் கேட்டு அடவடியாக செயல்படுபவர்கள், பா.ஜனதா கட்சிக்காரர்கள் கிடையாது. அவர்கள் சாதாரண மக்கள. உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்கள். 6 முறை ஆட்சியில் இருந்தவர்களுக்கும், பா.ஜனதாவிற்கும் 20 லட்சம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம்.

பா.ஜனதாவின் உச்சபட்ச வளர்ச்சி என்பது வட மாநிலங்களில் ஆட்சி அமைப்பது கிடையாது. தமிழகத்தில் ஆட்சி அமைப்பதுதான் எங்களின் வெற்றி என கடந்த 2019-ல் அமித்ஷா கூறி இருக்கிறார். அதனை நோக்கிதான் நாங்கள் பாடுபட்டு கொண்டு வருகிறோம். மக்கள் பா.ஜனதாவை உற்று நோக்கி பார்க்கிறார்கள்.

5 முறை முதல்- அமைச்சராக இருந்த கருணாநிதிக்கு, பா.ஜனதா மரியாதை செலுத்தும் வகையில் நாணயம் வெளியிட்டு நிகழ்ச்சியில் மத்திய அரசு சார்பாக பங்கேற்றோம். எதிரியாக இருந்தாலும் தகுதியான எதிரியை தேர்வு செய்து அவர்களுக்கு மதிப்பளிப்பார்கள் என்பதற்கு அந்த நிகழ்ச்சியே சாட்சி. அதில் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். இதே மரியாதையை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் செய்தோம். அந்த விழாவில், எம்.ஜி.ஆருக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டபோது, பிரதமர் மோடி கலந்து கொண்டார். எம்.ஜி.ஆர். நாடு முழுவதும் தெரிய வேண்டிய தலைவர். அவரின் புகழை நாடு முழுவதும்கொண்டு செல்வதற்காகத்தான், பிரதமர் மோடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியிட்டார். ஆனால், 2017-ல் வெளியிட்ட நாணயத்தை, 2019-ல் தான் அ.தி.மு.க.வினர் வெளியிட்டார்கள். மோடியின் பக்கம் மக்கள் சென்று விடுவார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் 2 ஆண்டுகள் கழித்து நாணயணத்தை வெளியிட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமாரை தங்களது ஊர் தாண்டினால் யாருக்கும் தெரியாது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை கூறி அ.தி.மு.க.வினர் வாக்கு பெறுகிறார்கள்.

2026-ல் தி.மு.க.விற்கு எதிராக உள்ள கட்சி ஆட்சி அமைக்கும். எப்போது தி.மு.க. ஒழிக்கிறதோ அன்றுதான் தமிழகம் மக்கள் மறுமலர்ச்சியாக இருப்பார்கள். தி.மு.க. என்னத்தான் சதி செய்தாலும், பா.ஜனதாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது. 60 வருடங்களாக திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். தமிழக மக்களிடம், திராவிட கட்சிகள் மாறிமாறி வீண் விஷ விதைகளை விதைத்து வைத்திருக்கிறார்கள்.

3-வது ஒரு அணி வந்தால் அவர்களை அழிப்பது தான், தி.மு.க.- அ.தி.மு.க.வின் முக்கிய கடமையாக இருக்கிறது. அதனால் தான் பா.ஜனதாவின் மீது அதிக கற்கள் வீசப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், பா.ஜனதா ஆட்சியில், தமிழுக்கு முக்கயத்துவம் கொடுக்கப்படுகிறது.

எந்த திட்டத்திற்கும் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை, தமிழகத்தை புறக்கணிக்கிறது, ரெயில்வே பட்ஜெட்டில் பணம் ஒதுக்கவில்லை என தி.மு.க. கூறுகிறது. ஆனால், அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி 143 கிலோ மீட்டர் புதிய ரெயில்வே பாதை அமைக்க மத்திய அரசு பணம் கொடுத்தது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான இடத்தை தற்போது வரை தமிழக அரசு மீட்டு தரவில்லை. தேசிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டும் என்றால், ஜல்லி, கல்லை கொடுக்க மறுக்கிறது. நிலத்தை கொடுத்தால் தானே திட்டத்தை கொண்டு வர முடியும்.

எய்ம்ஸ் திட்டம் முதலில் மதுரைக்கு வருவது கிடையாது. அந்த திட்டத்தை அப்போதை முதல்- அமைச்சர் உள்ளிட்டோர் வேறு இடத்தில் அமைக் வலியுறுத்தினர். இதுபோல், பலரும் மதுரைக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். ஆனால், மதுரையில் எய்ம்ஸ் வர வேண்டும் என்பது பிரதமர் எடுத்த தனிப்பட்டமுடிவு. இது சாதாரண எய்ம்ஸ் கிடையாது. டெல்லியை போன்று, மதுரையில் எய்ம்ஸ் வர வேண்டும் என்பது பிரதமர் விரும்பினார். அதன் காரணமாகவே, மதுரைக்கு எய்ம்ஸ் வந்தது. முழு தென் இந்தியாவிற்கு மதுரை எய்ம்ஸ் மையமாகவும், வட இந்தியாவிற்கு டெல்லி இருக்க வேண்டும் என பிரதமர் விரும்பினார்.

ஆனால், மத்திய அரசு திட்டம் என்றால் அதற்கான நிலத்தை கொடுக்காமல் ஜவ்வு மாதிரி இழுக்க வேண்டும் என தி.மு.க. நினைக்கிறது. இது 70 ஆண்டுகாலமாக திராவிட கட்சிகள் செய்யக்கூடிய அரசியல். தி.மு.க. என்ன செய்தாலும், 2026 மே மாதத்திற்குள் நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வரும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். அதற்கு வாய்ப்பு கொடுக்காமல், 2026-க்கும் கட்டி முடிக்கப்படும்.

மேற்கு வங்களம் உள்ளிட்ட மற்ற அனைத்து மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் தாமதப்படுத்த வேண்டும் என தமிழக முதல்- அமைச்சர் நினைக்கிறார். அதன் காரணமாக எந்த திட்டங்களுக்கும் நிலம் கொடுக்காமல் இருக்கிறார்கள். என்று அண்ணாமலை பேசினார்

  • Sathyaraj family political problem கட்டப்பா வீட்டில் குளறுபடி…மகள் மகன் எடுத்த அதிரடி முடிவு…குழப்பத்தில் சத்யராஜ்..!