அரசியல் பழிவாங்கலா? அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan16 February 2024, 7:33 pm
அரசியல் பழிவாங்கலா? அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு!
தமிழக அரசை கண்டித்தும், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை கண்டித்தும், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி, கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட 11 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட 11 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, ஜனநாயக முறையில் நடந்த கூட்டத்தை சட்டவிரோதமாக கூடிய குற்றமாக கருத முடியாது எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.