அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்… நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட் : யாருக்கு சாதகம்? இபிஎஸ்க்கா? ஓபிஎஸ்க்கா?

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2023, 1:32 pm

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தன்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் பணிகளில் இபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் மார்ச் 26-ம் தேதி பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்தது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் போட்டியிடாத பட்சத்தில் இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பின் இந்த அதிரடி முடிவால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும், இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று ஓபிஎஸ் தரப்பு கூறியது.

அதன்படி தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமென மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.

இந்த அவசர முறையிட்டை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, இந்த அவசர மனுவை நீதிபதி கே.குமரேஷ் பாபு விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் அணி தரப்பில்;- உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்து விட்டு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் பதவி தொடர்பான தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்ற இபிஎஸ்-ன் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. தேர்தல் ஆணையம் இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கே கடிதங்கள் அனுப்புகிறது. ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற வாதத்தை முன்வைக்கப்பட்டது.

மேலும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் பிரதான வழக்கே செல்லாதாகி விடும். எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, இபிஎஸ் தரப்பில்;- ஒன்றரை கோடி உறுப்பினர்களின் குரல் முடக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது.

தேர்தல் நடத்த கூடாது என உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஓபிஎஸ்க்கு 1.50 கோடி உறுப்பினர்களில் ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை.

தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. ஓபிஎஸ் நேரடியாக வழக்கு தொடரவில்லை. வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இதற்கான அடிப்படை உரிமை இல்லை என்றார்.

மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜூலை 11ல் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? கேள்வி எழுப்பினார்.

பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கு முடியும் வரை, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கலாம் என்ற நீதிபதியின் யோசனைக்கு, இபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம்; ஆனால், முடிவுகளை அறிவிக்க வேண்டாம். பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கு 22ம் தேதி விசாரிக்கப்பட்டு 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன் என நீதிபதி கூறியதை அடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

  • Dil Raju and Ram Charan collaboration கேம் சேஞ்சர் தோல்வி: ராம் சரணின் நெகிழ்ச்சி செயல்…மகிழ்ச்சியில் தில் ராஜு..!