இண்டியா கூட்டணியில் அதிமுக?…அரசியல் களத்தில் திடீர் திருப்பம்!
Author: Udayachandran RadhaKrishnan20 September 2023, 9:11 pm
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருப்பது, அதிமுக யாருடன் சேர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என்ற கேள்வியை எழுப்பி விட்டுள்ளதால் தமிழக அரசியல் களம் இப்போதே சூடு பிடித்து விட்டது.
அதிர்ச்சியில் பாஜக
ஜெயக்குமார் இதை அதிமுகவின் சார்பில்தான் தெரிவிக்கிறேன் என்று கூறியிருப்பதால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியோடுதான் அவர் இப்படி பேசியிருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
இது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரியதொரு கூட்டணியை அமைக்கலாம் என்று திட்டமிட்டு இருந்த பாஜகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாக மாறிவிட்டது.
அதேநேரம் தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவெடுப்போம் என்று ஜெயக்குமார் கூறியிருப்பதால் பாஜக கூட்டணியில் மீண்டும் அதிமுக இணைந்து விடுமா? அல்லது நிரந்தரமாக இனி பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லையா? அதிமுகவின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளும் எழுகின்றன.
திருமா, சீமான் வரவேற்பு
அதிமுகவின் இந்த அதிரடி நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வரவேற்று இருப்பது தேர்தல் அரசியலில் பல்வேறு யூகங்களையும் கிளப்பி விட்டு இருக்கிறது.
குறிப்பாக அதிமுகவிற்கு இரண்டு புதிய வாய்ப்புகள் உருவாகி இருப்பது, வெளிப்படையாகவே தெரிகிறது. ஏனென்றால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக தனித்து சந்திக்க விரும்பாது. அதனால் காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள இண்டியா கூட்டணியை நோக்கி அதன் பார்வை திரும்பலாம். ஆனால் இந்த கூட்டணியில் தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளும் திமுக பிரதான கட்சியாக இருக்கும்போது இது எப்படி சாத்தியமாகும்? என்ற சந்தேக கேள்வி எழுகிறது அல்லவா?
இண்டியா கூட்டணியில் அதிமுக?
இங்கேதான் ஒரு திருப்பம் இருப்பதை காண முடிகிறது. ஏனென்றால் கடந்த இரண்டாம் தேதி சென்னையில் நடந்த முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசும்போது,”கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். அதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலையாக இருக்கவேண்டும்”என்று பேசி ஒரு புயலை கிளப்பி விட்டார்.
இது தமிழகம் கடந்து தேசிய அளவிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஏனென்றால் வட மாநிலங்களில் சனாதன தர்மத்தை இந்துக்களில் 90 சதவீதம் பேர் நம்பிக்கையுடன் பின்பற்றுவதால் இண்டியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு தவிடு பொடி ஆகிவிடும் என்பதை உணர்ந்த அக் கூட்டணி கட்சிகள் திமுகவை வன்மையாக கண்டிக்கவும் செய்தன. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, அமைச்சர் உதயநிதியின் சனாதன தர்ம ஒழிப்பு பேச்சை ஏற்க முடியாது. அவர் ஒரு கத்துக்குட்டி போல பேசுகிறார்
என்று வெளிப்படையாக விமர்சிக்கவும் செய்தார்.
உதயநிதியால் வெறுப்பில் இண்டியா கூட்டணி?
எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளில் சில தங்கள் அணியில் இருந்து திமுகவை வெளியேற்றவேண்டும் என்று மறைமுக கோரிக்கையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே மூவருக்கும் நெருக்கடி தருவதாகவும் அமைந்தது. ஏனென்றால் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் 25 முதல் 30 தொகுதிகளில் இண்டியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும், அது மத்தியில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமைப்பதற்கு நல்வாய்ப்பாக அமையும் என்றும் காங்கிரஸ் கணக்கு போட்டு வைத்திருந்தது.
ஆனால் உதயநிதியின் சனாதன தர்ம ஒழிப்பு பேச்சால் வடமாநிலங்களில் மொத்தம் 75 தொகுதிகளில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றாலே அது மிகப்பெரியதொரு சாதனையாக இருக்கும் என்ற சூழ்நிலை தற்போது உருவாகிவிட்டது. அதனால் திமுகவை கூட்டணியிலிருந்து எப்படி கழற்றி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் தலைமைக்கு பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று வெளியாகி இருக்கும் அறிவிப்பு தித்திக்கும் செய்தியாக அமைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.
காங்கிரஸ் – அதிமுக கூட்டணி
ஏற்கனவே எம்ஜிஆர் உயிரோடு இருந்தபோது 1977 மற்றும் 1984 நாடாளுமன்றத் தேர்தல்களிலும், 1989 மற்றும் 1991ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடனும் காங்கிரஸ் கூட்டணி வைத்து மிகப்பெரியதொரு வெற்றியை கண்டிருந்தது. அதேபோல இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் வட மாநிலங்களில் சனாதன சிக்கலால் தோல்வியும் வராது. தமிழகத்தில் குறைந்த பட்சம் 14 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பும் கிடைக்கும், அதில் 12 இடங்களில் வெற்றியும் பெறலாம் என்ற சிந்தனையும் காங்கிரஸிடம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை தங்களுக்கு சாதகமான அம்சமாகவே காங்கிரஸ் கருத வாய்ப்பு உள்ளது. மேலும் முந்தைய தேர்தல்கள் போல காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் தவறு இல்லை என்ற மனநிலைக்கு அதிமுகவும் தள்ளப்பட்டு இருக்கிறது.
திமுக மீது அதிருப்தியில் திருமா
அதேநேரம் மேடைக்கு மேடை சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் வேங்கை வயல், திருமலைகிரி, நாங்குநேரி உள்ளிட்ட ஏராளமான ஊர்களில் பட்டியல் இன மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதே? என்று நொந்துபோய் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் நிலையும் உருவாகி உள்ளது.
ஏனென்றால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறினால் அதை மனதார வரவேற்பேன் என்று சில மாதங்களுக்கு முன்பு திருமாவளவன் கூறியிருந்தார். இப்போது மீண்டும் அதை உறுதி செய்துள்ளார். எனவே எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டில் திடமாக இருந்தால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அவர் தயங்க மாட்டார் என்பதும் நிச்சயம்.
அதேநேரம் இரண்டு முறை சட்டப்பேரவை தேர்தல், ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டும் கூட ஒரு வெற்றியையும் பெறாத நாம் தமிழர் கட்சியின் சீமானும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.ஏனென்றால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்பை சீமானும் உற்சாகத்துடன் வரவேற்று இருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
“இப்படியெல்லாம் அரசியலில் நடக்குமா என்று கேள்விகள் எழலாம். ஆனால் அதற்கான வாய்ப்பே இல்லை என அடியோடு மறுக்கவும் முடியாது. என்ற போதிலும் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க ஒரு போதும் விரும்பாது என்பதுதான் எதார்த்தமான உண்மை” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
“இப்போது அதிமுக, பாஜக கூட்டணியில் எழுந்துள்ள பிரச்சனைக்கு முக்கிய காரணமே இரண்டே இரண்டு விஷயங்கள்தான்.
பாஜக பிளான் : மறுக்கும் இபிஎஸ்
ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மூவரையும் அதிமுகவுடன் இணைத்து தேர்தலை சந்தித்தால் தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்ற முடியும் என்று டெல்லி பாஜக கணக்கு போடுகிறது. ஆனால் 2017 முதல் 2020 இறுதிவரை திமுகவுடன் மறைமுகமாக கைகோர்த்துகொண்டு அதிமுக ஆட்சியை கவிழ்க்க தீவிர முயற்சியில் ஈடுபட்ட டிடிவி தினகரனையும், கடந்த ஆண்டு அதிமுக தலைமை அலுவலகத்தை தனது ஆதரவாளர்களுடன் புகுந்து அடித்து நொறுக்கி அட்டூழியத்தில் ஈடுபட்ட ஓ பன்னீர்செல்வத்தையும் அதிமுகவிற்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல அதன் அடிமட்ட தொண்டர்கள் கூட ஏற்க மாட்டார்கள்.
மேலும் ஜெயலலிதாவுடன் இருந்த நெருக்கத்தை தவறாக பயன்படுத்தி அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் என அனைவரையும் சசிகலாவும், டிடிவி தினகரனும் அடிமைகள் போல் நடத்தி வந்ததும் ஊரறிந்த ரகசியம்.
ஆனால் இவர்களுக்கும் சேர்த்து 20 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கியே ஆகவேண்டும் என்று டெல்லி பாஜக தலைமை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிமுகவை வலியுறுத்தி வருகிறது, என்கிறார்கள். அதேநேரம் தேசிய அளவில் பாஜக மிகப்பெரிய கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் அது இன்னும் வளர்ச்சி பெறவில்லை என்பதால் அக்கட்சிக்கு 9 இடங்களுக்கு மேல் ஒதுக்க அதிமுக தயங்குகிறது. மேலும் பாமக, தமாகா, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு அதிமுகவே தொகுதி பங்கீடு செய்யவும் விரும்புகிறது.
அண்ணாமலை தவிர்த்திருக்கலாம்
தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதற்கு அண்ணாமலை கடுமையாக உழைக்கிறார் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அதேபோல அவர் மாநில பாஜக தலைவராக பதவி ஏற்ற பிறகுதான் அக்கட்சி ஏற்றம் பெற்றிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. பிரதமர் மோடிக்கு தமிழக இளைஞர்களிடம் நன் மதிப்பும் உள்ளது. அதனால் தங்கள் தலைமையில் கூட்டணி அமைந்தால் நமது கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பாஜக கருதினால் அது அப்படியே நடந்து விடுமா? என்பதை துல்லியமாக கூறுவதும் கடினம்.
சில மாதங்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த போது ஜெயலலிதா குறித்தும், சமீபத்தில் அண்ணாவை பற்றி கருத்து தெரிவித்ததையும் அண்ணாமலை தவிர்த்து இருக்கலாம். அதேநேரம் அதிமுகவில் 50 வருடங்களாக உள்ள எடப்பாடி பழனிசாமி கட்சியில் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளையும் வகித்து பின்னர் நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். தற்போது கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். அதனால் கூட்டணி தர்மம் கருதியாவது அவரை அண்ணாமலை விமர்சித்திருக்க வேண்டியதில்லை என்ற மனக்குமுறல் அதிமுகவினரின் அனைத்து மட்டத்திலும் உள்ளது.
ஏற்கனவே பாஜகவின் அடிமை போல அதிமுக செயல்பட்டு வருகிறது என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் இதையும் கேட்டுக் கொண்டு பேசாமல் இருந்தால் அது உண்மை என்பதுபோல் ஆகிவிடும் என்பதை உணர்ந்தே பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவிக்க காரணமாகி விட்டதோ என்றும் கருதத் தோன்றுகிறது.
கூட்டணியில் நெருக்கடி
டெல்லி பாஜக தலைமைதான், இதுபோல் நடந்து கொள்ளும்படி அண்ணாமலையிடம் கூறியிருக்கிறது என்றால் 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் உருவானபோதே அதை பாஜக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதற்கு புதிய வழிமுறைகளை வகுத்திருக்க வேண்டும்.
அல்லது கடந்தாண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது போன்ற அதே நிலைப்பாட்டில் அண்ணாமலை உறுதியாக இருந்து அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி இருக்கவேண்டும். இல்லையென்றால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலாவது பாஜக தனது வேட்பாளரை நிறுத்தி இருக்கலாம். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று கடந்த சில மாதங்களாக கூறி வரும் அண்ணாமலை 2024 நாடாளுமன்ற தேர்தலையும் அதேபோல் எதிர்கொள்வோம் என்று அறிவித்து செயல்பட்டிருந்தால் இன்றைக்கு கூட்டணியில் இந்த நெருக்கடியே ஏற்பட்டு இருக்காது.
அதிமுகவிடம் சமரசம் பேசும் பாஜக
ஒரே நேரத்தில் திமுகவையும், அதிமுகவையும் எதிர்த்து அரசியல் செய்தால் தமிழகத்தில் பாஜகவை வலிமையான கட்சி ஆக்கிவிடலாம் என்று அண்ணாமலை நினைப்பது போல் தெரிகிறது. அதில் எந்த தவறும் இல்லை. அதிமுகவுடன் கூட்டணி இல்லாத நிலையில் அண்ணாமலை இப்படியொரு தீர்மானத்துடன் செயல்பட்டிருந்தால் அதற்கு பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவை விமர்சித்ததால்தான் இந்த சிக்கலே எழுந்துள்ளது.
இதில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடம்தான் இருக்கிறது என்பதால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் டெல்லி பாஜக மேலிடம் இனி தீவிரமாக இறங்கலாம்.
ஒதுங்காமல் ஒட்டிக்கொண்டால் நல்லது
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு அதிமுக ஆட்சி நீடிப்பதற்கு தனது முழுமையான ஆதரவை பாஜக தலைமை அளித்ததால், எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற விரும்ப மாட்டார். அதேபோல எதிரும், புதிருமாக உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் விரும்பாது என்பதால், இண்டியா கூட்டணி பக்கம் அதிமுக செல்லாது என்றும் உறுதியாக கூறலாம். டெல்லி பாஜக மேலிடமும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை கைவிட்டு விட நினைக்காது.
எனவே சண்டை, சச்சரவுகளை உடனே ஓரங்கட்டி வைத்து விட்டு அதிமுகவும், பாஜகவும் தாங்கள் வீழ்த்தவேண்டிய பொது எதிரி யார்? என்ற கேள்விக்குத்தான் முதலில் விடை காணவேண்டும். அதுதான் இரு கட்சிகளுக்கும் நல்லது. குறிப்பாக தேர்தலின்போது இரு கட்சிகளின் தொண்டர்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கு இப்போதே டெல்லி பாஜக மேலிடம் தீர்வு காணும் முயற்சியில் இறங்க வேண்டும். இல்லையென்றால் இரு கட்சியினரும் மனக்கசப்புடன் தேர்தல் பணியாற்றாமல் ஒதுங்கிக் கொள்ளும் நிலைதான் ஏற்படும். அது இரு கட்சிகளுக்கும் தேர்தலில் எந்த பலனையும் தராது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.