அதிமுக யாருக்கும் அடிமை இல்லை.. அமித்ஷா சொன்னது 25… அதிமுக 40 இடங்களில் வெல்லும் : எடப்பாடி பழனிசாமி!!
Author: Udayachandran RadhaKrishnan18 June 2023, 2:21 pm
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு அரசியல் கருத்துக்களை குறிப்பிட்டார்.
அதில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி பற்றியும், அடுத்த கட்ட நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் பல்வேறு தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் சிரிப்பை வரவழைக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் எப்படி அமைச்சரவையில் தொடரலாம், தமிழகத்திற்கு என்று அரசியல் நாகரீக வரலாறு உள்ளது.
அதனை திமுக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதி மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். சிறை கைதி ஆகிவிட்ட ஒருவரை எப்படி அமைச்சராக தொடர வைக்க முடியும் என கேள்வி எழுப்பினார். இதனால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அடுத்ததாக,அண்மையில் அமித்ஷாவின் தமிழக வருகை பற்றியும், அவர் தமிழகத்தில் 25 இடங்களில் பாஜக வெல்ல வேண்டும் என குறிப்பிட்டதையும் பற்றி கேட்கப்பட்டது. உடனே சற்று யோசித்த எடப்பாடி பழனிச்சாமி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தமாக 40 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார்.
தற்போது வரை அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.