டெல்லியில் தீவிரம் காட்டிய அதிமுக… இபிஎஸ்காக காத்திருந்த சட்ட வல்லுநர்கள் : அதிரடியாக நடந்த மீட்டிங்!!!
Author: Udayachandran RadhaKrishnan14 September 2023, 6:10 pm
டெல்லியில் தீவிரம் காட்டிய அதிமுக… இபிஎஸ்காக காத்திருந்த சட்ட வல்லுநர்கள் : அதிரடியாக நடந்த மீட்டிங்!!!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி விவகாரங்கள், தொகுதி பங்கீடுகள் குறித்த ஆலோசனைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA), இந்தியா (I.N.D.I.A) கூட்டணி என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் இருந்து அதிமுக முக்கிய அங்கம் வகித்து வருகிறது. இந்த சமயத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பற்றி பாஜக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்ட வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
டெல்லியில் உள்ள தனியார் விடுதியில் சட்ட வல்லுநர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த உத்தரவு எதிர்த்து உச்சநீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.