பாஜக ஆதரவு கட்சிகளை வளைக்க அதிமுக புது பிளான்! EPS போடும் கணக்கு பலிக்குமா?…

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2024, 9:13 pm

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய அக்னி பரீட்சை என்பது அரசியலில் உள்ளோர் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று.

ஏனென்றால் அதிமுகவை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்ட பின்பு அவர் சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் இதுதான். இதனால் 2019ல் ஒரு தொகுதியில் வென்றதை விட இந்த தேர்தலில் கூடுதலாக பல மடங்கு எம்பி இடங்களை கைப்பற்றி தனது தலைமையிலான அதிமுகதான் தமிழகத்தில் வலிமையான இரண்டாவது மிகப் பெரிய கட்சி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு நிறையவே இருக்கிறது.

இதை சாதித்து காட்டிவிட்டால் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் EPSக்கு உள்ளது.

முதலில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கட்சிகளை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டால் 2026 தமிழக தேர்தல் எளிதில் கைகூடி விடும் என்று அவர் நம்புகிறார். ஏனென்றால் டிடிவி தினகரன் பக்கம் எஞ்சியுள்ள ஓரிரு சதவீத தொண்டர்களும் அதிமுக பக்கம் திரும்பிவிடும் வாய்ப்பு நிறையவே உள்ளது. அவர் சார்ந்த சமுதாயத்தினரிடமும் டிடிவி மீதான ஆர்வம் கணிசமாக குறைந்து விடும் என்று EPS கணக்கு போடுகிறார்.

இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை அதிமுகவின் தொகுதி பங்கிட்டு பேச்சுக் குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, பெஞ்சமின் நால்வரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.

அப்போது டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடி, தென்காசி தொகுதிகளுடன் ராஜ்யசபா எம்பி சீட் ஒன்றையும் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தென்காசியை மட்டும் ஒதுக்க முன்வந்துள்ள அதிமுக, ராஜ்ய சபா எம்பி சீட் பற்றி தேர்தல் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாகவும், புதிய தமிழகம் அதை ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியபோதே புதிய தமிழகம் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவுடன்தான் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பது உறுதியாக தெரிந்துவிட்டது. எனவே புதிய தமிழகம் அதிமுக பக்கம் சாய்ந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று கூறப்பட்டாலும் கூட கடந்த மாதம் வரை பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக இருந்த டாக்டர் கிருஷ்ணசாமியை வளைத்து தங்களது கூட்டணிக்குள் அதிமுக கொண்டு வந்து விட்டது அரசியல் வட்டாரத்தில் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

இன்னொரு பக்கம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை கடந்த ஒன்றாம் தேதி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி, கே பி அன்பழகன், பெஞ்சமின் ஆகிய நால்வரும் சந்தித்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசினர்.

அப்போது தேமுதிக தரப்பில், ஏழு நாடாளுமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. குறிப்பாக துணைப் பொதுச் செயலாளர் எல் கே சுதீஷ் போட்டியிடும் வகையில் கள்ளக்குறிச்சி தொகுதியை எங்களுக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று பிரேமலதா கறார் காட்டிருக்கிறார்.

அதிமுக தரப்பில் பேச்சு வார்த்தைக்கு சென்ற முன்னாள் அமைச்சர்களோ, ராஜ்யசபா எம்பி சீட் ஒதுக்குவது கடினம். அதேநேரம் நான்கு தொகுதிகளை தர அதிமுக தயாராக இருக்கிறது. கள்ளக்குறிச்சியை ஒதுக்குவது குறித்து எடப்பாடியாரிடம் பேசிய பிறகுதான் முடிவெடுக்க முடியும் என்று உறுதிப்பட கூறிவிட்டனர்.

இதற்கு முக்கிய காரணம் அதிமுக கூட்டணிக்குள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் பாமகவும், கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்பதுதான். இந்த நிலையில் தான் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா என்பதற்கு தெளிவான விடை கிடைத்துள்ளது.

ஏனென்றால் தற்போது கள்ளக்குறிச்சிக்கு பதிலாக மதுரை அல்லது திருச்சியை தங்களுக்கு ஒதுக்குமாறு தேமுதிக சற்று இறங்கி வந்திருப்பதாக தெரிகிறது. சுதீஷ் உடல் நலக்குறைவுடன் இருப்பதால் அவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்கிறார்கள்.

இதனால் அதிமுக கூட்டணியில் பாமக இணைவதற்கான தடை நீங்கி விட்டது வெளிப்படையாகவே தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பாமக தலைவர் டாக்டர் ராமதாசை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி, சிவி சண்முகம் இருவரும் அதிகாரப்பூர்வமான முறையில் பிப்ரவரி ஆறாம் தேதி சந்தித்து பேச இருப்பதாகவும், அன்று ஏழு தொகுதிகள் பிளஸ் ஒரு ராஜ்யசபா எம் பி சீட் என்பது இருதரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் பாமகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீட்டை முடிக்கும் அதே நாளில் ஏற்கனவே பிரேமலதாவை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குழுவினர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு சென்று கூட்டணியையும் தொகுதி உடன்பாட்டையும் உறுதி செய்து விடுவார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்பது ஏற்கனவே உறுதியாகி விட்ட நிலையில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளும் EPSசுடன் கை கோர்த்து விட்டால் அதிமுகவுக்கு மிகுந்த வலிமை சேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அதிமுகவில் கூட்டணிப் பேச்சு வார்த்தை என்பது இன்னும் சில வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது பிப்ரவரி 10ம் தேதிக்குள்ளேயே முடிவுக்கு வந்து விடும் போல் தெரிகிறது.

“எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன்
2026 தமிழக தேர்தலுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்” என்று மூத்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“அதனால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னால் வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக இப்போதே பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்தால் நல்லது என்று நினைக்கின்றன. ஏனென்றால் திமுகவின் ஆட்சி திருப்திகரமாக இல்லை அதனால் அந்த கூட்டணி எளிதில் தோல்வி அடைந்து விடும் என்றும் இந்த மூன்று கட்சிகளும் கருதுகின்றன.

இதை உறுதிப்படுத்துவதுபோல அண்மையில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 40க்கும் மேல் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது 30 சதவீதத்திற்கு கீழாக இறங்கும் வாய்ப்பும் உள்ளது.

அப்போது அதிமுக கூட்டணியின் வாக்குகள் 40 சதவீதத்தை கடந்து 170 தொகுதிகளுக்கும் குறையாமல் வெற்றியைத் தரும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக நம்புகிறார். இதன் அடிப்படையில்தான் பாமகவுக்கு 30+, தேமுதிகவுக்கு 20+, புதிய தமிழகத்துக்கு 4 தொகுதிகள் என்று ஒதுக்கி தர தயாராக இருப்பதாக கூறி கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். அதை இந்த மூன்று கட்சிகளும் ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது.

அதேநேரம் திமுகவாலோ, பாஜகவாலோ இப்படியொரு உறுதிமொழியை இப்போதே கொடுப்பது கடினம். நாளை நடப்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று அந்தக் கட்சிகள் ஒதுங்கிக் கொள்ளலாம். ஆனால் அரசியலில் எதிர்கால நம்பிக்கையும் அவசியம் தேவை.

அந்த நம்பிக்கையை எடப்பாடி பழனிசாமி கொண்டிருப்பதால்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் 2026 தமிழக தேர்தலுக்கான வியூகத்தையும் சேர்த்தே அவர் கையில் எடுத்திருக்கிறார்” என்று அந்த மூத்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

EPS போடும் கணக்கு பலிக்குமா? என்பது 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது தெரிந்துவிடும். அதுவரை சஸ்பென்ஸ்தான்

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 220

    0

    0