ஓசூரில் விமான நிலையமா? சாத்தியமே இல்லை : யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு : அண்ணாமலை ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2024, 2:15 pm
CM Stalin
Quick Share

ஓசூரில் 2ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி 110 ன் கீழ் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. வில்சன் அவர்கள், ஓசூர் விமான நிலையம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, அன்றைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் திரு. V.K. சிங் அவர்கள், தெளிவாகப் பதிலளித்துள்ளார்.

இந்திய அரசு மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கிடையேயான ஒப்பந்தத்தின்படி, பெங்களூர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு, 150 கி.மீ. சுற்றளவில், புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்பதையும், ஓசூரில் அமைந்துள்ள விமான நிலையம், TAAL என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நிலையம் என்பதால், மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது என்பதையும், ஓசூர் விமான நிலையத்தைப் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்த ஆகும் செலவு 30 கோடி ரூபாய் என்றும் விளக்கமாகக் கூறியதோடு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் ஆய்வு முடிவுகளையும் எடுத்துக் கூறியிருந்தார்.

அத்துடன், தமிழக அரசு TAAL நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்திப் பயன்படுத்தலாம் என்றும் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.

இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. 30 கோடி ரூபாய் செலவில் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.

ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு, 110 ஆம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 7,200 புதிய பள்ளி வகுப்பறைகள், 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்பாடு, 1,000 புதிய பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்டவை, இரண்டு ஆண்டுகளாக அரைகுறை நடவடிக்கைகளோடு நிற்கின்றன.

இரண்டு ஆண்டுகளில், பேருந்துகளைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், மூன்று ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Views: - 104

0

0