அட்சய திருதியை முன்னிட்டு தங்க நகைகள் விற்பனை அமோகம் : மக்களின் கவனத்தை ஈர்த்த நகைகள் எது தெரியுமா..?

Author: Babu Lakshmanan
4 May 2022, 8:29 am

அட்சய திருதியை முன்னிட்டு தங்க நகைகள் விற்பனை அமோகமாக காணப்பட்ட நிலையில், மோதிரம், தோடு உள்ளிட்ட சிறிய நகைகள் மட்டுமே அதிகம் விற்பனையாகியுள்ளது.

அட்சய திருதி நாளில் தங்கம் உள்ளிட்ட குறிப்பிட்ட பொருட்களை வாங்குவதன் மூலம், வாழ்வில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். அதன்பேரில், நேற்று அட்சய திருதியை முன்னிட்டு, தங்க நகைக்கடைகளில் விற்பனை களைகட்டியது. அதிகாலை முதலே பொதுமக்கள் நகை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக, தொழில் நகரான கோவையில் ஒரே நாளில் 50 கோடி ரூபாய் மதிப்பில் 100 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மோதிரம், தோடு உள்ளிட்ட சிறிய நகைகள் மட்டுமே அதிகம் விற்பனையாகியுள்ளது.

இது தொடர்பாக கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது:- அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பல மடங்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக அன்றைய தினத்தில் வழக்கத்தைவிட தங்க நகைகள், பவுன் காசு உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகம் காணப்படும்.

இந்த ஆண்டு அட்சய திருதியை முன்னிட்டு ஒரே நாளில் 50 கோடி ரூபாய் மதிப்பில் 100 கிலோ எடையிலான தங்க நகைகள் கோவை நகரில் உள்ள கடைகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மோதிரம், தோடு, சின்ன செயின் உள்ளிட்ட சிறிய அளவிலான தங்க நகைகளை வாங்கவே பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

அட்சய திருதியை தினத்தில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட நகைகளில் மேற்குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த நகைகள் மட்டுமே மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அட்சய திருதியை தினத்தில் ஓரளவு நல்ல விற்பனை அனைத்து தங்க நகைக் கடைகளிலும் காணப்பட்டது. இதனால் தங்க நகை தொழிலில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 1361

    0

    0