திமுக மீது அழகிரி பாய்ச்சல் : ஸ்டாலின் சொன்னது என்ன ஆச்சு?!!
Author: Udayachandran RadhaKrishnan22 March 2022, 5:27 pm
தமிழகத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை, கோவை மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சி மேயர் பதவிகளையும் திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது. அதேபோல 138 நகராட்சிகளில் 134-ம், 489 பேரூராட்சிகளில் 435-ம் திமுக கூட்டணியின் வசமே சென்றது.
5 ஆண்டுகளாக நீடிக்கும் கூட்டணி!!
இது கடந்த 5 ஆண்டுகளாக ஒரே அணியாக நீடிக்கும் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட 13 கட்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.
ஆனாலும் வார்டு உறுப்பினர்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டதால் மாநகராட்சிகளில் மேயர் துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு கடந்த 4-ம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.
கூட்டணிக்கு சொற்ப இடங்களை ஒதுக்கிய திமுக
இந்தப் பதவிகளுக்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு திமுக தலைமை குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களையாவது ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்த்தன. ஆனால் திமுக ஒதுக்கியதோ 2 சதவீதத்துக்கும் குறைவுதான்.
சரி கிடைத்தவரை லாபம் என்று திமுகவின் கூட்டணி கட்சிகள் அதை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டன. ஆனாலும் பெரும்பான்மையான வார்டுகளில் திமுக வெற்றி பெற்று இருந்ததால் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் மதிமுக கட்சிகளுக்கு இதில் ஒருவித நெருக்கடியும் ஏற்பட்டது.
கூட்டணிகளுக்கு ஒதுக்கியும் எல்லை மீறிய திமுகவினர்
திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்த நகராட்சி பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை திமுகவினரே போட்டி வேட்பாளராக நின்று வெற்றியும் பெற்றனர். 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தக் கூத்து நடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தங்களது மனக்குமுறலை கொட்டித் தீர்த்தனர்.
திமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்
இதையடுத்து திமுக மூத்த தலைவர்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி திமுக போட்டி வேட்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தார். “கட்சியின் கட்டுப்பாட்டை காற்றில் பறக்கவிட்டு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். அதன் பிறகு என்னை நேரில் சந்தியுங்கள்” என்றும் உத்தரவிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்டு பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
ஆனால் பதவி விலகாத போட்டி வேட்பாளர்களில் ஒரு சிலர் இன்னும் விலகாமல் தொடர்ந்து தலைவராகவும், துணைத்தலைவராகவும் நீடித்து தலைமைக்கு ஆட்டம் காட்டி வருகின்றனர். இதனால் அவர்களை கட்சியிலிருந்து திமுக மேலிடம் தற்காலிகமாக நீக்கம் செய்தும் வருகிறது.
கூட்டணிகளை சமாதானப்படுத்திய திமுக
இதனால்தான் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் இது பற்றி முறையிட நேர்ந்தது. இதில் பெரும்பாலான கட்சிகளுக்கு சாதகமான நிலை ஏற்பட்டதால் அந்தக் கட்சிகள் தற்போது ‘கப்சிப்’ ஆகிவிட்டன.
ஆனால் காங்கிரசுக்கு மட்டும் இப்பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சித் தலைவர் பதவி தங்களுக்கு ஒதுக்கப்பட்டும் கூட அது இன்னும் கைகூடவில்லையே என்கிற அதிருப்தி தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம் நிறையவே காணப்படுகிறது.
காங்கிரஸ் அதிருப்தி
இதை மிக அண்மையில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்த அவர் மீண்டும் ஒரு முறை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இந்த விவகாரத்தை விரக்தியுடன் நினைவூட்டியும் இருக்கிறார்.
அழகிரி கூறும்போது, “காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட சில இடங்களில், திமுகவினர் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். இதனால், நாங்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம். இது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின், ஏற்கனவே மிகப் பெரிய அறிக்கை வெளியிட்டுள்ளார். விரைவில், இதற்கு ஒரு தீர்வை அவர் தருவார் என நம்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் விட்டுத்தர மாட்டோம்
பல பேரூராட்சிகளில் இதுபோன்ற சிக்கல் நீடித்து வரும் நிலையில், கே எஸ் அழகிரி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த மண்ணான ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சித் தலைவர் பதவியை மட்டும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
அரசியல் விமர்சர்கள் கருத்து
இதன் பின்னணிதான் என்ன?… இது பற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது,
“தற்போது தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகைக்கு அழகிரியின் சிபாரிசால்தான் இந்தப் பதவியே கிடைத்தது. தவிர 2021 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவரும் அழகிரிதான். கட்சியில் அவருக்கு சீட் கொடுக்கக்கூடாது என்று எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அதனால்
அழகிரி மீது, எப்போதுமே செல்வப்பெருந்தகைக்கு விசுவாசம் உண்டு.
அதேநேரம், திமுக தலைமை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கியும் கூட அதை உள்ளூர் திமுக நிர்வாகிகள் ஏற்க மறுத்து விட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் செல்வமேரி எதிராக திமுக நகர செயலாளர்
சதீஷின் மனைவி சாந்தியை நிற்க வைத்து அவரை பேரூராட்சி தலைவராக வெற்றி பெறவும் வைத்துவிட்டனர்.
அழகிரி மூலம் நெருக்கடி கொடுத்த செல்வப்பெருந்தகை
திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்த நிலையிலும் தலைவர் என்ற முறையில் பேரூராட்சியின் முதல் கூட்டத்தை சாந்தி கடந்த வாரம் நடத்தி முடித்தும் விட்டார்.
தலைவர் பதவிக்கு, தான் சிபாரிசு செய்த செல்வ மேரியை திமுக வார்டு உறுப்பினர்கள் திட்டம் போட்டு தோற்கடித்து விட்டதாக செல்வப்பெருந்தகை கருதுகிறார். அதனால்தான் அழகிரி மூலம் திமுக தலைமைக்கு நெருக்கடி அளித்தும் வருகிறார்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்று உள்ளூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் விடாமல் குரல் எழுப்பியும் வருகின்றனர். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மவுனப் போராட்டம், தியானம் என பல்வேறு வழிகளில் தங்கள் எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தவும் செய்தனர். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.
விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடி காட்டும் திமுகவினர்
இன்னொரு பக்கம் திமுக சார்பில் தனது மனைவிதான் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சதீஷ் மலைபோல் நம்பி இருந்தார். மேலும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்ததை ஸ்ரீபெரும்புதூர் நகர திமுக நிர்வாகிகளால் ஜீரணிக்க முடியவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பும், பின்பும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை கைப்பற்றும் நோக்கில் உள்ளூர் திமுக நிர்வாகிகள் பெருமளவில் செலவு செய்ததாக கூறப்படுகிறது. அதனால்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய சாந்தி தயக்கம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
காங்கிரஸ் வேட்பாளர் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால், செல்வப் பெருந்தகையின் கை ஸ்ரீபெரும்புதூரில் மேலும் ஓங்கி விடும் என்ற கலக்கமும் உள்ளூர் திமுக நிர்வாகிகளிடம் காணப்படுகிறது.
தலைமையை மதிக்காத திமுகவினர்
இந்த விவகாரம் அறிவாலயத்தை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஆனால் ஸ்ரீபெரும்புதூர் நகர திமுக நிர்வாகிகளோ கட்சித் தலைமையை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர் என்கிறார்கள். இது தெரிந்துதான், கே எஸ் அழகிரி மனம் வெதும்பி போய் மீண்டும் ஸ்டாலினிடம் முறையிட்டு இருக்கிறார்.
அதில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவைக் கூட உள்ளூர் திமுக நிர்வாகிகள் மதிக்க மாட்டேன் என்கிறார்களே என்ற ஆதங்கம்தான் அதிகம் தென்படுகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.