அதிக காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் படுகாயம் ; ‘வெளியே போக மாட்டேன்’ என அடம்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பின்னர் நடந்த சுவாரஸ்யம்!!
Author: Babu Lakshmanan17 January 2023, 2:38 pm
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளை பிடித்து முதலிடத்தில் உள்ள மாடுபிடி வீரர் அபிசித்தர் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 1000 காளைகள், 350 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு 10 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடிக்கும் சிறந்த காளைக்கும், மாடுபிடி வீரருக்கும் தலா ஒரு நிசான் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.
போட்டியின் போது சிறப்பாக விளையாடக்கூடிய காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு பைக், ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்சி போன்ற பல்வேறு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. போட்டி முழுவதிலும் சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளை பிடித்து முதலிடத்தில் உள்ள மாடுபிடி வீரர் அபிசித்தர் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காளைகளை விரட்டி அடிக்கும் ரோந்து போலீசார், வாடிவாசல் முன்பு வாகனத்தை கொண்டு வந்து திருப்பிய போது, அதில் பட்டு அவர் காயமடைந்தார்.
இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக வெளியே அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், வெளியேற மறுத்த அபிசித்தர், தொடர்ந்து களமாடுவேன் எனக் கூறி களத்திலேயே இருந்தார்.
சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் களமாடியது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்ததுடன், தமிழர்களின் வீரத்தை பறைசாட்டுவதாக இருப்பதாக கூறினர்.
0
0