அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் போலீஸார் திடீர் தடியடி… தெறித்து ஓடிய பார்வையாளர்கள் : மதுரையில் பதற்றம்!!
Author: Babu Lakshmanan17 January 2023, 11:22 am
மதுரை – அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பார்வையாளர்களின் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 1000 காளைகள், 350 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு 10 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடிக்கும் சிறந்த காளைக்கும், மாடுபிடி வீரருக்கும் தலா ஒரு நிசான் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.
போட்டியின் போது சிறப்பாக விளையாடக்கூடிய காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு பைக், ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்சி போன்ற பல்வேறு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. போட்டி முழுவதிலும் சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு வாடிவாசல் அருகே பார்வையாளர் கேலரி அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை பார்வையாளர்கள் இந்த கேலரியில் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த கேலரியில் ஏறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் மற்றும் வெளி மாநில மற்றும் சுற்றுலா பார்வையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இதனால், நெரிசல் ஏற்பட்டு அவர்கள் கீழே தடுமாறி விழுந்தனர். இதனால், அவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் சிறுவர்கள் முதல் ஏராளமான நபர்கள் காயமடைந்தனர்.