குடிப்பழக்கத்தை பெருக்க ரூம் போட்டு யோசிப்பாங்களோ?…கொதிக்கும் சமூக நல ஆர்வலர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan30 April 2023, 8:39 pm
தமிழக அரசுக்கு வருவாயை ஈட்டி தருவதில் டாஸ்மாக் மிக முக்கிய பங்காற்றுகிறது என்பது ‘குடிமக்கள்’ அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம். ஆனால் அதையே மிகப் பெரிய தொழில் முதலீடு போல கருதி மது விற்பனையை அதிகரிப்பதற்கு சமீபகாலமாக திமுக அரசு எடுத்து வரும் நூதன நடவடிக்கைகளுக்கு எதிராக
ஒட்டு மொத்த மக்களிடையே பெரும் கொந்தளிப்பு எழுவதையும் பார்க்க முடிகிறது.
500 மதுக்கடைகள் மூடப்படும்
தமிழ்நாடு மாநில வாணிப கழகமான டாஸ்மாக்கில் கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி மொத்தம் 5 ஆயிரத்து 329 சில்லறை விற்பனை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இந்த ஆண்டு 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு ஒன்றை இரண்டு வாரங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.
இதனால் உண்மையிலேயே திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போல் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் இழுத்து மூடிவிடும் என்ற பெரும் எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது. குறிப்பாக திருமணமான பெண்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கும் உள்ளானார்கள்.
ஷாக் கொடுத்த தமிழக அரசு
அதேநேரம் 2023-24 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கலுக்குப் பின் பேசிய தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் டாஸ்மாக் விற்பனையை 45 ஆயிரம் கோடியில் இருந்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறி தமிழக மக்களுக்கு பலத்த ‘ஷாக்’ அளித்தார்.
இது உண்மையிலேயே சாத்தியமாகுமா? என்ற கேள்வியும் எழுந்தது.
மண்டபங்கள், மைதானங்களில் மது
அதற்கு, முடியும் என்பதுபோல இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணை ஒன்று அமைந்திருந்தது. திருமண மண்டபங்கள், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு மைதானங்களில் அரசின் சிறப்பு அனுமதி பெற்று மது விற்பனை செய்யலாம் என்று
அதில் கூறப்பட்டிருந்தது.
திருமண மண்டபங்களில் மது விற்பனை செய்ய அனுமதிப்பட்டால் அது சமூகத்தில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும், குடும்பத்தினர் யாரும் திருமணங்களுக்கு செல்ல முடியாத அவல நிலை உருவாகும், அது மட்டும் இன்றி சட்டம்- ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படும் என்று அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக நல ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து இந்த அரசாணையை உடனடியாக திரும்ப பெறவேண்டும் திமுக அரசை வலியுறுத்தினர். பொதுமக்களிடமும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
ஜகா வாங்கிய திமுக அரசு
வலுவான எதிர்ப்பு காரணமாக வேறு வழியின்றி அந்த அரசாணையில்
திருமண மண்டபங்களில் மது விற்பனைக்கு அனுமதி அளித்ததை மட்டும் தமிழக அரசு நீக்கியது.
இந்த நிலையில் திருமண மண்டபங்கள், விளையாட்டுக் கூடங்களில் மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து உடனடியாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஜூன் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தது. இதனால் தமிழக மக்கள் தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விடும் வாய்ப்பு கிடைத்தது.
மதுபான ஏடிஎம்
இந்த நிலையில்தான் திமுக அரசு இன்னொரு புதிய யுக்தியை கையில் எடுத்து மதுபான ஏடிஎம் மூலம் விற்பனையை சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில்
தொடங்கி வைத்துள்ளது. இதற்காக புதிதாக மது வழங்கும் எந்திரமும் நிறுவப்பட்டு இருக்கிறது. ஏடிஎம் எந்திரம் போல இயங்கும் இதில் உரிய தொகையைச் செலுத்தி மது வகைகளை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சமூக நல ஆர்வலர்களை கடும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்த தானியங்கி எந்திரம் மூலம் டாஸ்மாக் பணியாளர்களின் முன்னிலையில் கடைகளின் உள்ளேதான் மது விற்பனை நடக்கும். 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது என்று திமுக அரசு என்னதான் காரணம் கூறினாலும் இத்திட்டம் தமிழக மக்களிடமும் சமூக நல ஆர்வலர்களிடமும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற எந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் வந்துள்ள செய்திகள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாதாரண குளிர்பானங்களை அருந்துவதே உடல் நலத்திற்குக் கேடு என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வரும் நிலையில், இளைஞர்கள் அனைவரையும் மது அருந்த தூண்டுகிறது, திமுக அரசு.
இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என எல்லோரும் வந்து செல்லும் மால்களில் டாஸ்மாக் தானியங்கி எந்திரம், மக்களுக்கு என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற அடிப்படை யோசனைகூட தமிழக அரசுக்கு இல்லையா? ஏற்கனவே பள்ளி மாணவ, மாணவியர் சீருடை அணிந்தே மதுபானங்கள் அருந்துவது ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் மக்கள் நலனையோ, இளைஞர்களின் எதிர்காலத்தையோ, தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டையோ கருத்தில் கொள்ளாமல் திமுக அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.
இத்திட்டத்தை அரசு உடனயாகக் கைவிட வேண்டும்” என்று ஆவேசமாக குறிப்பிட்டு இருக்கிறார்.
அன்புமணி எதிர்ப்பு
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், “மது என்பது சமூக நீதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். தானியங்கி எந்திரம் மூலம் மதுபானங்கள் வழங்குவதை நிறுத்தவில்லை எனில் உடனடியாக போராட்டம் நடத்துவோம். இத்தகைய சட்டவிரோத மது விற்பனை நிலையங்களை எதிர்த்து பாமக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படும்”என்று தனது எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் இத்திட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை அறிவித்து இருக்கிறார்.
ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
“தமிழகத்தில் மது விற்பனையை அதிகரிப்பதற்காக திமுக அரசு ரூம் போட்டு யோசிப்பதுபோல் தெரிகிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக உலக அளவில் புகழ்பெற்ற 5 பொருளாதார நிபுணர்கள் கொண்ட ஆலோசனை குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்த அடுத்த மாதமே ஏற்படுத்தினார். ஆனால் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசுக்கு என்னென்ன திட்டங்களை வகுத்துக் கொடுத்தார்கள் என்பது இதுவரை பரம ரகசியமாகத்தான் உள்ளது” என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
“ஒருவேளை 5 பொருளாதார நிபுணர்களில் இருவர் அமெரிக்கா, பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் நாட்டு கலாச்சாரப்படி திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், வணிக வளாங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மது விற்பனை செய்யும் திட்டத்தை கூறியிருப்பார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.
மது விற்பனை அதிகரிப்பு
ஏனென்றால் இத்திட்டம் அடுத்த 3 ஆண்டுகளில் முழுமையாக நிறைவேறும் பட்சத்தில் தமிழக அரசுக்கு மது வருமானம் மூலம் மட்டுமே ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் 2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் எளிதில் நிறைவேற்றி விடலாம் என்று அந்த பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை கூறி இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நான்கு வணிக வளங்களில் மட்டுமே தானியங்கி எந்திரம் மூலம் மது விற்பனை தொடங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் இது மாநிலத்தில் உள்ள மற்ற 97 வணிக வளாகங்களில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளுக்கும் விரிவுபடுத்தப் படலாம் என்ற அச்சமும் எழுகிறது. இது இளம் வயதினரிடையே வரவேற்பை பெரும் பட்சத்தில் காலப்போக்கில் தமிழகத்தில் உள்ள சுமார் 450 வணிக வளாகங்களிலும் தானியங்கி மது விற்பனை செய்யும் எந்திரங்கள் முளைத்து விடலாம்.
இளைஞர்கள் சீரழியும் வாய்ப்பு
என்னதான் 21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்கப்படமாட்டாது என்று கூறினாலும் 17 வயது சிறுவன் பார்ப்பதற்கு இளைஞனைப் போல முகத்தில் தாடி, மீசை, திடகாத்திரமான உடல்வாகுடன் இருந்தால் வணிக வளாக மது எந்திர மேற்பார்வையாளர் அந்த சிறுவனை அடையாள காண முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது. அதனால் அவனது தேவையை மது விற்பனை செய்யும் எந்திரம் பூர்த்தி செய்துவிடும் வாய்ப்புகள் அதிகம். அதேநேரம், ஒரு குழுவில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் சிறுவர்கள் என்கிற பட்சத்தில், 21 வயதான அந்த இளைஞர் மற்ற சிறுவர்களுக்கும் சேர்த்து மது வாங்கிவிட முடியும்.
ஏற்கனவே டாஸ்மாக்கில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் கூடுதலாக வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில் அதை தடுத்து நிறுத்த முடியாத டாஸ்மாக் நிர்வாகம் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க வணிக வளாங்களில் இந்த வசதியை கொண்டு வந்ததாக கூறுவது நகைச்சுவையாகவே தோன்றுகிறது.
திரும்பப் பெறுமா திமுக அரசு?
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக இளம் விதவைகள் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் டாஸ்மாக் மது என்பது அனைவருக்கும் தெரியும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பியும் முன்பு வேதனைப்பட்டிருக்கிறார்.
எப்படி பார்த்தாலும் தமிழக மக்களிடையே பெருமளவில் மது பழக்கத்தை அதிகரிக்கும் ஒரு முயற்சியாகத்தான் இந்த புதிய திட்டம் தெரிகிறது. இது கலாச்சார சீரழிவுக்கும் வழிவகுக்கும். எனவே இத்திட்டத்தை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெறுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் கவலையோடு கூறுகிறார்கள்.
விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த புதிய விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்!