இதெல்லாம் துரோகம்… வரலாற்று பிழையை செஞ்சிட்டீங்க : ஆளுநர் தமிழிசை ஆவேசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2023, 2:13 pm

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் நாடாளுமன்றத்தில் நம் மனதை ஆளும் தமிழ் ஒலித்தபடியே நம் தமிழ் அரசர்கள் பயன்படுத்திய செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது.

புதிய நாடாளுமன்றத்தில் முதன்முதலில் புகுந்தது நம் தமிழ். மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்திற்குள் எளிய சிவனடியார்கள் புடைசூழ நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பொற்கரங்களால் முதல் நிகழ்வாக தமிழ்நாட்டுச் செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது.

நீதி வழுவாத செங்கோல் என்று சொல்லப்படும் செங்கோல் நம் நாடாளுமன்றத்தை முதன்முதலில் அலங்கரிக்கிறது. இந்த நிகழ்வை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மிகப்பெரிய பெருமையை தமிழுக்கும், தமிழர்களுக்கும் கொடுத்தது தமிழச்சி என்ற வகையில் மெய்சிலிர்த்து கண்டேன்.

அதற்காக மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடியார்கள் அரசாள்வர் என்ற திருஞானசம்பந்தரின் வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு மக்கள் அரசாளும் நாடாளுமன்றத்திற்குள் ஒலித்து இருப்பது தமிழக ஆன்மீகம் எவ்வளவு தொலைநோக்கு பார்வை கொண்டது. அன்று பாடியது, நாடாளுமன்றம் மூலம் இன்று மக்களை நாடியது.

யார் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் செங்கோல் நிறுவிய காட்சி பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் வரலாற்று புகழ் சேர்த்திருக்கிறது.

இதைப் புறக்கணித்தவர்கள் தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்து மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை ஆற்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

அவர்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு என் தமிழுக்கு கிடைத்த பெருமையைத் தமிழுக்கு சூட்டிய மகுடமாக நினைத்து பிரதமருக்கு கோடான கோடி தமிழ்நாட்டு மக்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Keerthy Suresh and Anirudh relationship rumors பிரபல இசையமைப்பாளரின் காதல் வலை…சிக்கிய கீர்த்தி சுரேஷ்…விரைவில் திருமண அறிவிப்பு .!
  • Views: - 333

    0

    0