‘தொழிலாளிகளின் உரிமையை பறித்து முதலாளிகளிடம் சமர்பிக்காதீங்க… பேரவையில் திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு ; முதல்முறையாக நடந்த சம்பவம்!!
Author: Babu Lakshmanan21 April 2023, 4:45 pm
சட்டசபையில் தொழிற்சாலைகள் திருத்த சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தினசரி 12 மணிநேரம் என 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை கொண்டு 2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்த சட்டத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, பேரவையில் தங்கம் தென்னரசு பேசியதாவது:- தொழிற்சாலைகளில் நெகிழ்வுத்தன்மை வரவேண்டும் என்பதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்ததற்காக இதை கொண்டு வரவில்லை. குறிப்பிட்ட சில தொழிலுக்கு மட்டுமே இது பொருந்தும். தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் அமல்படுத்தப்படும்.
எந்ததொழிலார்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும். வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு, 5வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது, எனக் கூறினார்.
இதனிடையே, சட்டசபையில் தொழிற்சாலைச் சட்டத்தில் 65A விதியை புகுத்தி திருத்தம் செய்து மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது தொழிலாளர் விரோதம். தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை முதலாளிகளிடம் சமர்ப்பணம் செய்யும் கொடூரம். தமிழக அரசே மசோதாவை கைவிடு, என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு நிர்வாகி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
0
0