ஒரே இரவில் நடந்த அதிசயம்: 4.6 கிலோ எடை குறைப்பு : சாத்தியமானது எப்படி….!!
Author: Sudha10 August 2024, 2:36 pm
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்துக்கான போட்டி நடக்கும் முன், 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை அமன் ஷெராவத் குறைத்துள்ள விவரம் ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது.
100 கிராம் எடையால் இறுதிப்போட்டியில் விளையாடும் தகுதியை வினேஷ் இழந்தார். இந்த விஷயத்தில் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சனங்கள் இப்பவும் இணையத்தில் இங்கும், அங்கும் உலவிக் கொண்டிருக்கின்றன.
57 கிலோ மல்யுத்த அரையிறுதி போட்டியில் அவர் பங்கேற்கும் முன்பாக எடை 61.5 கிலோவாக இருந்தது.போட்டியில் தோற்றுவிட்டதால் வெண்கலப்பதக்க போட்டிக்கு தயாரானார், அதற்கான நேரமும் குறைவாகவே இருந்துள்ளது.
அடுக்கி வைக்கப்பட்ட கற்கள் மீது சூடான நீரை ஊற்றி, அதன் மூலம் வெளியாகும் நீராவியில் குளிப்பது என எடையைக் குறைக்க அமன் மேற்கொண்ட முயற்சிகள் கடுமையாக இருந்தது.
பயிற்சியின் இடையே அசதியை போக்கும் வண்ணம்,எலுமிச்சை சாறுடன் தேன் கலந்த நீர், திரவ ஆகாரமாக அமனுக்கு தரப்பட்டது. அதிகாலை 4.30 மணியளவில் எடையை பரிசோதித்த போது 56.9 கிலோ எடையாக இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 100 கிராம் எடை குறைவாக இருந்ததால் தகுதி இழப்பில் இருந்து தப்பித்து உள்ளார்.
சமயோசிதம், சரியான திட்டமிடல், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் மூலம் 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடை குறைத்து வெண்கலப்பதக்கத்தை தாய்நாட்டுக்காக பெற்று தந்திருக்கிறார் அமன் ஷெராவத்.