அமர் பிரசாத் ரெட்டி கைது… திமுகவின் அதிகாரத் திமிரு, ஆணவத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் : அண்ணாமலை கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2023, 9:10 pm

அமர் பிரசாத் ரெட்டி கைது… திமுகவின் அதிகாரத் திமிரு, ஆணவத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் : அண்ணாமலை கண்டனம்!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு உள்ளது. இதன் அருகே சுமார் 50 அடி உயரம் கொடிக்கம்பம் நடப்பட்டு இன்று கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

அதோடு, அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகளும், பொதுமக்களும் கொக்டி கம்பத்தை அகற்ற சொல்லி புகார் அளித்ததோடு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனையறிந்த பாஜக தொண்டர்களும் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி வாகனத்தை போலீசார் வரவழைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் அந்த வாகனத்தின் கண்ணாடியை கற்களை எறிந்து உடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பாஜக தொண்டர்கள் சிலரை அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததன் காரணமாக கைது செய்தனர். அவர்களை போலீசார் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இந்த வழக்கில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அவர் தலைமறைவானதால் கைது செய்யப்படாமல் இருந்தார். இந்நிலையில் கானாத்தூர் தனிப்படை போலீசார் சற்று முன்பு குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தனர். இதையடுத்து அவர் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, மாநகராட்சியிடம் முன் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொடிக்கம்பத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது பாஜகவினர் போராட்டம் செய்தனர்.
பாஜகவினர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜே.சி.பி இயந்திரத்தை உடைத்தனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதோடு, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படியே, ஆறாவது நபராக அமர் பிரசாத் ரெட்டி இன்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்திய புகாரின் பேரிலேயே அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அமர்பிரசாத் ரெட்டி கைதுக்கு அண்ணாமலை திமுக மீது கடுமையான விமர்சனத்தையும், கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது X தளபக்கத்தில், தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் திரு அமர்பிரசாத் ரெட்டி அவர்களையும், தமிழக பாஜக நிர்வாகிகள் திரு சுரேந்திர குமார், திரு. பாலகுமார், திரு. கன்னியப்பன், திரு. வினோத் குமார், திரு. செந்தில் குமார் ஆகியோரையும், காவல்துறையை ஏவி கைது செய்திருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஊழலில் கொழுத்த நபர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, திமுகவின் சீர்கெட்ட ஆட்சியை விமர்சிக்கும் ஒரே காரணத்துக்காக பாஜகவினரைப் பழி வாங்கும் திமுகவின் போக்கு நெடுங்காலம் நீடிக்காது. அதிகாரத் திமிரிலும், ஆணவத்திலும் ஆடிக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 380

    0

    0