‘REQUEST பண்ணி தான் கேட்குறேன்… 40% உங்களுக்கு… 60% எங்களுக்கு’.. கமிஷன் கேட்டு கறாராக பேசிய திமுக எம்எல்ஏ.. வைரலாகும் வீடியோ..!!
Author: Babu Lakshmanan1 October 2022, 10:58 am
மாதனூர் ஒன்றியத்தில் ஊராட்சிகளுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் கமிஷன் கேட்டு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கறாராகப் பேசி வாக்குவாதம் செய்யும் ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினரின் பரபரப்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கந்திலி, ஆலங்காயம் உள்ளிட்ட ஒன்றியங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து டெண்டர் வைப்பது தொடர்பாக ஐந்து ஒன்றியங்களில் முடிவடைந்தது.
மாதனூர் ஒன்றியத்தில் மிட்டாளம், வெங்கடசமுத்திரம், தேவலாபுரம், வடபுதுப்பட்டு, மாதனூர் உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் தொடர்பாக டெண்டர் வைப்பதில் கடந்த இரண்டு வாரங்களாக பிரச்சனை நீடித்து வந்தது. இந்த நிலையில், ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஒன்றிய குழு பெருந்தலைவர் சுரேஷ்குமார் மற்றும் துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.
அப்போது, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கமிஷன் சதவீதம் குறித்து ஊராட்சிமன்ற தலைவர்களிடம், 40% உங்களுக்கு… 60% எங்களுக்கு.. என கறாராகப் பேசி வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர், “உனக்கு சிலை வைக்கிறேன்”, என கூறியதற்கு வேறு எம்எல்ஏவாக இருந்திருந்தால், நீ சொன்ன வார்த்தைக்கு கோபம் வந்துட்டு இருக்கும். உனக்கு சிலை வைக்கிறேன் என சொல்றீங்க, சிலை யாருக்கு வைப்பாங்க, செத்தவங்களுக்கு தான் வைப்பாங்க, என எம்எல்ஏ கொதித்தெழுந்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், திருப்பத்தூர் போன்று மாதனூர் ஒன்றியம் இல்லையே அப்படி என்ற கேள்விக்கு, “நாளைக்கு உன் பஞ்சாயத்துக்கு நான் தான் வந்து உட்காருவேன். திருப்பத்தூர் எம்எல்ஏ வந்து உட்காருவானா?, அந்தாளு என்ன செய்கிறார் என்பது உங்களுக்கு தெரியாது”, என திருப்பத்தூர் திமுக எம்எல்ஏவையே ஆம்பூர் திமுக எம்எல்ஏ பேசியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊராட்சிமன்ற தலைவர்களிடம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தொகுதியில் திட்டப் பணிகளில் கமிஷன், கரப்ஷன் காட்டும் திமுக எம்எல்ஏ வில்வநாதன், மக்களுக்கான பணிகளில் ஆர்வம் காட்டவில்லை என அங்குள்ள அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.